கோவை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மொத்த ஜவுளிப் பொருட்கள் விற்பனையில் பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை இழை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. எதிர்காலத்தில் பருத்தி பயன்பாடு முற்றிலும் குறைவதற்கான அறிகுறி இது என்று தொழில் துறையினர் தெரிவித்தனர்.
பருத்தியை மூலப் பொருளாகக் கொண்டு செயல்படும் இந்திய ஜவுளிச் சங்கிலித் தொடரில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பருத்தி மூலம் தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருட்களைவிட, செயற்கை இழை கலந்து தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருட்களுக்கான உற்பத்திச் செலவு குறைகிறது. மேலும், அவை துணியின் ஆயுளை அதிகரிக்கவும், சுருக்கத்தை குறைத்து மேம்படுத்தவும் உதவுகின்றன. இதனால் சமீபகாலமாக ஜவுளிப் பொருட்கள் உற்பத்தியில் பருத்திக்கு மாற்றாக பாலியஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கை இழை பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.