கோவை, அக். 18: கோவை மாநகராட்சியில் ஆண், பெண் என சுமார் 6 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, மாதம்தோறும் அந்தந்த மண்டலம் வாரியாக தனியார் காண்ட்ராக்டர்கள் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்களில் அதற்குரிய உதவித்தொகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் துப்பரவு பணியாளர்கள் ஆண்கள், பெண்கள் என சுமார் 200 பேர் நேற்று காலை மாநகராட்சி பிரதான அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இந்த அலுவலக வளாகத்தில், தரையில் அமர்ந்து, கோஷம் எழுப்பினர். தீபாவளி பண்டிகைக்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் சம்பளம், அதாவது ரூ.16 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தினர்.
அவர்களிடம் மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி காண்டிராக்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் பிரதிநிதிகள் என முத்தரப்பினர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என வலியுறுத்தினர். ஆனால், இதை, அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அந்த இடத்திலேயே, போனஸ் வழங்குவது பற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும், அப்படி அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே கலைந்துசெல்வோம் என பிடிவாதமாக கூறிவிட்டனர். இதனால், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை பலன் அளிக்காமல் போனது. தொடர்ந்து போராட்டம் நடத்தினர். காலை 9.30 மணிக்கு துவங்கிய இப்போராட்டம், மாலை 4.20 மணி வரை நீடித்தது. அப்போது, மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இன்று (வெள்ளி) காலை மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என அறிவித்தனர்.
The post தீபாவளி போனஸ் கேட்டு மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.