நன்றி குங்குமம் தோழி
பெண் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்த பொம்மை என்றால் அது பார்பி பொம்மைதான். அந்த பொம்மை அழகாக இந்திய பாரம்பரிய உடை அணிந்து இருந்தால் அப்படியே கையில் அள்ளிக் கொள்ளதான் மனம் ஏங்கும். இந்த தீபாவளிக்கு புதுவரவாக அறிமுகம் செய்திருக்கிறார்கள் ‘பார்பி தீபாவளி டால்’ (Barbie Diwali Doll). மேட்டல் என்கிற பிரபல வணிக நிறுவனம் இந்த ஆண்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் முதல் முதலாக இந்திய பாரம்பரிய உடை அணிந்த சிறப்பு தீபாவளி பார்பி பொம்மை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய ஆடை வடிவமைப்பாளரான அனிதா டோங்ரே இந்த பார்பி பொம்மைக்கு அழகிய பாரம்பரிய உடையை வடிவமைத்துள்ளார். பார்ப்பதற்கே பளிச்சென்ற நிறத்தில் கிராப் டாப், ராஜஸ்தான் பாரம்பரிய உடையான கோட்டி, நீளமான கணுக்கால் வரையிலான லெஹங்கா பாவாடை என முற்றிலும் இந்திய பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு பொம்மையின் பிரத்யேக உடை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தங்க நிறத்தில் அணியப்பட்ட சந்த்பாலி காதணிகள், வளையல் அடுக்கு, ஸ்டைலெட்டோஸ் எனப்படும் உயரமான காலணிகள் ஆகியவை பார்பி பொம்மையின் அழகை மெருகேற்றும் விதமாக அமைந்துள்ளது. லெஹங்கா பாவாடையில் மல்லிகை, டஹ்லியாக்கள் மற்றும் தாமரை பூக்களின் வடிவங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆடை வடிவமைப்பாளரான அனிதா டோங்ரே இந்த பார்பி பொம்மையின் வடிவமைப்பில் ‘பாரம்பரிய கைவினைத்திறனுடன் நவீன அழகியலை சேர்க்க முயன்றிருக்கிறார்’ என மேட்டல்
நிறுவனம் தெரிவித்திருக்கிறது. “இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் நான் மற்றும் பார்பி இருவரும் இந்திய ஃபேஷன் மற்றும் கலாச்சாரத்தின் அழகிய பாரம்பரியத்தை கொண்டாட உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஊக்குவிக்கிறோம்” என அனிதா டோங்ரே ஒரு செய்தி வெளியீட்டில் தெரிவித்திருக்கிறார்.
“இந்தியாவின் துடிப்பான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்ற அதே சமயத்தில் பன்முகத்தன்மையின் ஆற்றலையும் அழகையும் கொண்டாடும் வகையில் இந்த பார்பி பொம்மை இருக்கும் என நம்புகிறோம்” என்று மேட்டல் இந்தியா நிறுவனத்தின் வட்டார மேலாளர் லலித் அகர்வால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
பன்முகத்தன்மையை மையமாகக் கொண்ட பார்பி பொம்மைகளின் பரிணாம வளர்ச்சியில் இந்த பொம்மை சமீபத்திய வெளியீடாக இருக்கிறது. ஆனால் 1959ம் ஆண்டில் பார்பி பொம்மைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து பார்பி பொம்மைகள் என்றாலே சிறிய உடல் அமைப்பு, மெலிதான இடை, மஞ்சள் நிற தலை முடியுடன் கூடிய பாரம்பரியமான பாலின சித்தரிப்புகளுடன் இருக்கும். இது கலாச்சாரம் மற்றும் இன பின்னணிகளின் உண்மைத்தன்மையை பிரதிபலிக்கவில்லை என்கிற விமர்சனங்களுக்கும் ஆளாகின. ஆனால் பார்பி பொம்மைகளின் 65வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது பொம்மைகளின் புதுவரவில் மாற்றங்கள் இருந்தன. இப்போது சந்தைக்கு வருகின்ற பார்பி பொம்மைகள் எல்லாம் 35 விதமான சரும நிறங்களிலும், 93 சிகை அலங்காரங்களிலும், 9 உடல் வகைகளிலும் இருக்கின்றன.
அனிதா டோங்ரே வடிவமைத்துள்ள இந்திய பாரம்பரிய உடையிலான தீபாவளி பார்பி பொம்மை அறிமுகப்படுத்தப்பட்டு உலகம் முழுக்க அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பார்பி பொம்மை பிரியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
The post தீபாவளி பாரம்பரிய உடையில் பார்பி பொம்மை! appeared first on Dinakaran.