புதுடெல்லி,
தீபாவளி பண்டிகை மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாள்தோறும் கூடுதலாக 2 லட்சம் பயணிகள் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நாட்டின் கிழக்குப் பகுதிகளுக்கு ஏராளமான பயணிகள் பயணம் செய்வதால், வடக்கு ரெயில்வே கணிசமான எண்ணிக்கையிலான ரெயில்களை இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் சாத் பூஜையின் போது மக்கள் கூட்டத்தை சமாளிக்க 4,500 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்துள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறப்பு ரெயில்களைத் தவிர, பயணத்திற்கான கூடுதல் திறனை உருவாக்க ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் அதிகரிக்கப்படுகின்றன என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.