தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் இனிப்பு, கார வகைகள் ரூ.115 கோடிக்கு விற்பனை: கடந்தாண்டை விட ரூ.10 கோடி விற்பனை அதிகரிப்பு, நிர்வாகம் தகவல்

2 weeks ago 4

சென்னை: கடந்தாண்டை விட இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிலையங்களில் ரூ.115 கோடி அளவிற்கு இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் உப பொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 225 வகையான பால் பொருள்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வரை சுமார் ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என ஆவின் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை : ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள் சுமார் 4.5 லட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் ஆவின் நிறுவனம் கிராம அளவில் உள்ள லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை பெரிய அளவில் மேம்படுத்த உதவுகிறது. தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் மற்றும் கார வகைகள் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்களிடையே இவ்வகையான சிறப்பு இனிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை அணுகி அவர்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் கார வகைகள் விநியோகிக்கப்பட்டது. தற்போது வரை சுமார் ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் இனிப்பு, கார வகைகள் ரூ.115 கோடிக்கு விற்பனை: கடந்தாண்டை விட ரூ.10 கோடி விற்பனை அதிகரிப்பு, நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article