தீபாவளி: சிறப்பு முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த துணை முதல்-அமைச்சர்

2 months ago 14

சென்னை,

தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் 108 அவசரகால மேலாண்மை மையத்தில் (108 Emergency Response Center), தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னேற்பாடு பணிகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

தீபாவளி நேரத்தில் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நம்முடைய முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, 108 அவசர கால சேவை மையத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 12 ஆயிரம் அழைப்புகள் வருவது வழக்கம். ஆனால், தீபாவளி நேரம் என்பதால், 20 ஆயிரம் அழைப்புகள், அதாவது 60 சதவீதம் அளவுக்கு அதிகமான அழைப்புகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக, Emergency Management Center-3 shift-லும், கூடுதலாக, 50 பேர் பணி அமர்த்தப்பட்டு, மொத்தம் 194 நபர்கள் அழைப்புகளை ஏற்கும் வகையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வழக்கத்தை விட கூடுதலாக தீக்காயங்களும் மற்றும் சாலை விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்காக ஏற்கனவே கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து (FIRE ACCIDENT) நோயாளிகளை எதிர்கொள்ள 75 படுக்கை வசதி கொண்ட ஸ்பெசல் வார்டு உள்ளது.

தீபாவளி தீக்காயங்களை எதிர்கொள்ள ஏதுவாக, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், அவசரகால மருத்துவ உதவியாளர்கள் மற்றும் அவசரகால மேலாண்மை மையத்தில் பணிபுரிபுவர்களுக்கு தேவையான அறிவுரைகளும், பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில், சென்னை மற்றும் புதுக்கோட்டை அவசரகால மேலாண்மை மையங்கள் இணைந்து செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களுக்கும் தடையின்றி ஆம்புலன்ஸ்களை இயக்குவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்புடனும், பத்திரமாகவும் தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article