திஷா சாலியன் மரண விவகாரத்தில் எம்எல்ஏ ஆதித்ய தாக்கரே நடிகை ரியா, 2 நடிகர்கள் மீது வழக்கு: மும்பை போலீஸ் அதிரடி

3 days ago 2

மும்பை: திஷா சாலியன் மரண விவகாரத்தில் சிவசேனா எம்எல்ஏ ஆதித்ய தாக்கரே, நடிகை ரியா, 2 நடிகர்கள் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேலாளர் திஷா சாலியன் (28), கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையின் மலாட்டில் இருக்கும் 14வது மாடி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்தார். அடுத்த ஒரு வாரம் கழித்து, சுஷாந்த் தனது பாந்த்ரா குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அப்போதுதான் திஷாவின் மரணம் மர்மமானது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் இவ்வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர். இருப்பினும், சுஷாந்தின் மரணம் கொலை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, சிபிஐயும் விசாரணை நடத்தியது. இது, தற்கொலை என்று அவர்களின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதேநேரம் திஷாவின் மரணத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும் எம்எல்ஏவுமான ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு இருப்பதாக திஷாவின் தந்தை சதீஷ் சாலியன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஆதித்யா தாக்கரே, பாலிவுட் நடிகையும், சுஷாந்தின் காதலியுமான ரியா சக்ரபோர்த்தி, நடிகர்கள் டினோ மோரியா, சூரஜ் பஞ்சோலி ஆகியோர் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக திஷாவின் தந்தை சதீஷ், எம்எல்ஏ ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

சந்தேகத்திற்கிடமான மரணம் மற்றும் அரசியல் தலையீட்டைக் காரணம் காட்டி, தனது மகளின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நடிகர்கள் சூரஜ் பஞ்சோலி, டினோ மோரியா மற்றும் அப்போதைய மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் ஆகியோருக்கு எதிராகவும் விசாரணை கோரப்பட்டது. மேலும் தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், காவல்துறை ஆணையர் பரம்பீர் சிங் குற்றத்தை மறைக்க சதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 2ம் தேதி உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க உள்ள நிலையில், தற்போது திஷா மரணம் தொடர்பாக ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post திஷா சாலியன் மரண விவகாரத்தில் எம்எல்ஏ ஆதித்ய தாக்கரே நடிகை ரியா, 2 நடிகர்கள் மீது வழக்கு: மும்பை போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article