
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு லக்னோவில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 204 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 67 ரன்கள் அடித்தார்.
இந்த ஆட்டத்தில் திலக் வர்மா (25 ரன், 23 பந்து, 2 பவுண்டரி) தொடர்ந்து தடுமாறியதால் அவரை 19-வது ஓவரில் 'ரிட்டயர்டு அவுட்' முறையில் மும்பை நிர்வாகம் வெளியேற்றியது. அவருக்கு பதிலாக மிட்செல் சாண்ட்னரை களமிறக்கியது. இருப்பினும் மும்பை அணியால் வெற்றி பெற முடியவில்லை.
இந்த விவகாரம் தற்போது விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ஏனெனில் இந்திய டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரராக ஆடி வரும் திலக் வர்மாவை ரிட்டயர்டு அவுட் ஆக்கி மும்பை வெளியேற்றியது பல முன்னாள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திலக் வர்மாவை விட மிட்செல் சாண்ட்னர் சிறந்த ஹிட்டரா? என்று இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், மும்பை நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஹர்பஜன் சிங், "சாண்ட்னருக்காக திலக்கை ரிட்டயர்டு அவுட் ஆக்கியது என் கருத்துப்படி தவறு. சாண்ட்னர் திலக்கை விட சிறந்த ஹிட்டரா? அது போல்லார்டு அல்லது வேறு ஏதேனும் திறமையான ஹிட்டராக இருந்தால் எனக்குப் புரிந்திருக்கும். ஆனால் இதை நான் ஏற்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.