
புதுடெல்லி,
டெல்லி ராஷ்டிரபதி பவனில் 2 நாள் நடைபெறும் 2024-2025 ஆண்டுக்கான பார்வையாளர்கள் மாநாட்டை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தொடங்கி வைத்து பேசினார். அவர் தொடக்க உரையில் பேசும்போது, எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கான அளவும், அதன் கல்வி முறையில் உள்ள தரத்தின் வழியே பிரதிபலிக்கப்படும் என பேசினார்.
அறிவுசார் பொருளாதாரத்தில் முக்கிய மையம் என்ற அளவில் இந்தியாவை நிலைநிறுத்துவதற்கான இலக்கை அடைவதில், உயர் கல்வி அமைப்புகளின் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும் அவர் பேசியுள்ளார்.
கல்வியுடன் ஆராய்ச்சிக்கு நிறைய கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் அவர் அப்போது சுட்டிக்காட்டினார். இதற்காக தேசிய ஆராய்ச்சி நிதியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த முக்கியம் வாய்ந்த திட்ட தொடக்கத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி, ஆராய்ச்சி பணியை உயர் கல்வி அமைப்புகள் ஊக்குவிக்கும் என்று தன்னுடைய நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய திறமையால், உலக அளவில் முன்னணியில் உள்ள கல்வி மையங்களை வளப்படுத்தி அவற்றை வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக மாற்றியுள்ளனர் என்றார். இதனால், திறமையான இந்திய மாணவர்களால் பல நாடுகள் வளர்ச்சி அடைந்த பொருளாதார நிலையை அடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டி பேசினார்.
அவர்களுடைய திறமையை நம்முடைய நாட்டிலும் பயன்படுத்த முயற்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.
இதேபோன்று, நம்முடைய நாட்டின் பல உயர் கல்வி மையங்களுக்கு உலகளாவிய தர அடையாளத்திற்கான மதிப்பு உள்ளது. இந்த மையங்களில் படித்த மாணவர்களுக்கு, உலக அளவில் சிறந்த மையங்கள் மற்றும் நிறுவனங்களில் பெரிய பொறுப்புகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.