
ரோத்தக்,
அரியானாவில் ரோத்தக் நகரின் சம்ப்லா பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் நீல நிற சூட்கேஸ் ஒன்று சில நாட்களுக்கு முன் மூடப்பட்ட நிலையில் நீண்டநேரம் கிடந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் வந்து அதனை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, சூட்கேசுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டரான ஹிமானி நர்வால் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த படுகொலை பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அரியானா போலீசார் அமைத்துள்ளனர். அந்த இளம்பெண்ணின் மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சைபர் பிரிவு மற்றும் தடயவியல் துறை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நர்வாலின் தாய் மற்றும் சகோதரர் டெல்லியில் வசிக்கின்றனர். இவர் அரியானாவில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில், நர்வாலின் தாய் சவீதா நர்வால் செய்தியாளர்களிடம் பேசும்போது, நர்வாலின் மரணத்திற்கான முக்கிய காரணம் என்னவென்று போலீசார் விசாரிக்க வேண்டும். அது என்னவென எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
போலீசாரின் நடவடிக்கையில் எனக்கு திருப்தியில்லை என்றார். அந்த குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அப்படி இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன். அதற்கு அரியானா அரசும், நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.
அந்த குற்றவாளியுடன் நர்வால் நண்பராக பழகினார் என போலீசார் கூறிய விசயங்களை மறுத்து இருக்கிறார். இதுபற்றி சவீதா கூறும்போது, குற்றவாளி தன்னை பாதுகாக்க புதுசு புதுசாக கூறி வருகிறார். நர்வால் ஏன் கொல்லப்பட்டார்? என ஆட்சியில் இருப்பவர்கள் எனக்கு தெரிவிக்க வேண்டும். பணம் இதற்கான காரணம் கிடையாது.
நர்வாலை கொலை செய்திருக்கிறார் என்றால், பின்னர் அவர் எப்படி அவளின் நண்பராக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கில் மொபைல் போன் கடை நடத்தி வரும் சச்சின் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரும் நர்வாலும் சமூக ஊடகம் வழியே சந்தித்து கொண்டனர் என்றும் நர்வால் வீட்டுக்கு சச்சின் செல்வது வழக்கம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதுபோன்று பெண்களை, சிறுமிகளை கொலை செய்யும் நபர்களை தூக்கில் போட வேண்டும் என பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான மணீஷ் குரோவர் கூறியுள்ளார். இதனை சமூகம் சகித்து கொள்ளாது. சட்டம் அந்நபரை மன்னிக்காது. நர்வாலின் குடும்பத்தினர் வைக்கும் கோரிக்கையை அரசிடம் எழுப்புவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.