
புதுடெல்லி,
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 47-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார்.
பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யவன்ஷி சதம் விளாசினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய 14 வயது வீரரான சூர்யவன்ஷி வெறும் 35 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதமடித்த வீரர், ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் சதமடித்த வீரர், அதிவேகமாக சதமடித்த இந்தியர் போன்ற ஏராளமான சாதனைகளை படைத்தார். இதனால் பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் சூர்யவன்ஷியை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய முன்னாள் வீரரான மதன் லால், சூர்யவன்ஷிக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "அவர் மிகவும் திறமையானவர். ஆனால் திறமை மட்டுமே வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்காது. அவர் கவனம் செலுத்த வேண்டும், ஒழுக்கமாக இருக்க வேண்டும். தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அவரது செயல்முறை சரியாக இருந்தால், அவர் அற்புதமான உயரங்களை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.
இப்படி ஒரு பையனை நான் இதுவரை பார்த்ததில்லை. நான் டெல்லி அணியின் கேப்டனாக இருந்தபோது, சச்சின் மிக இளம் வயதிலேயே எங்களுக்கு எதிராக விளையாடி ரஞ்சி டிராபி அரையிறுதியில் 80 ரன்கள் எடுத்தார். பின்னர் விராட் கோலி வந்தார். அவர் இன்னும் விளையாடி வருகிறார்.
இப்போது, எல்லோரும் சூரியவன்ஷியைப் பற்றி பேசுகிறார்கள். அவர் ஒரு சூப்பர் ஸ்டாரின் அனைத்து குணங்களையும் கொண்டவர். சூர்யவன்ஷிக்கு சிறப்பான ஹிட்டிங் திறன்களை கடவுள் கொடுத்திருக்கிறார். ஆனால் நீங்கள் அதில் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது. உங்கள் நேர்மை, ஒழுக்கம், வளர்ப்பு இவை மிகவும் முக்கியம். குடும்ப ஆதரவும் முக்கியம்.
உங்கள் பெற்றோர் ஆதரவாக இருக்கும்போது, அது உங்களுக்கு கூடுதல் உந்துதலைத் தரும். அத்துடன் உள்ளூரில் பல்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக விளையாடுவது உங்களுடைய வளர்ச்சிக்கு உதவும்" என்று கூறினார்.