'திரையரங்குகள் காலியாக இருக்கின்றன...' ஆலியா பட்டின் 'ஜிக்ரா' படத்தை விமர்சித்த இந்தி நடிகை

1 month ago 8

மும்பை,

இந்தி சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலியா பட் 2012-ல் 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர்' என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் 'ஹைவே, உட்தா பஞ்சாப், ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் 'வொன்டர் உமன்' நடிகை கால் கடோட் நடிப்பில் வெளியான 'ஹார்ட் ஆப் ஸ்டோன்' திரைப்படம் மூலம் ஹாலிவுட்டில் ஆலியா பட் கால் பதித்தார்.

இதனை தொடர்ந்து, இயக்குனர் வாசன் பாலா இயக்கத்தில் ஆலியா பட் நடித்த ' ஜிக்ரா' திரைப்படம் கடந்த 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை ஆலியா பட்டின் எடர்னல் சன்ஷைன் புரொடக்சன்ஸ் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. அதே சமயம், இந்த படம் வெளியான 2 நாட்களில் 11 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரபல இந்தி நடிகையும், டி-சீரிஸ் தயாரிப்பு நிறுவன தலைவர் பூஷன் குமாரின் மனைவியுமான திவ்யா கோஸ்லா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஜிக்ரா திரைப்படம் பார்க்க சென்றிருந்தேன். திரையரங்கம் காலியாக இருக்கிறது. அனைத்து திரையரங்குகளும் காலியாகவே இருக்கின்றன. ஆலியாவுக்கு உண்மையிலேயே திறமை அதிகம். அவரே அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி, போலியான வசூல் விவரத்தை அறிவித்துள்ளார். ரசிகர்களை நாம் ஏமாற்றக் கூடாது" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், 'ஜிக்ரா' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோகர், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "முட்டாள்களிடம் நீங்கள் பேசும் சிறந்த பேச்சு மவுனம்" என்று குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில், கரண் ஜோகர் மறைமுகமாக திவ்யா கோஸ்லாவை விமர்சித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் திவ்யா கோஸ்லா நடிப்பில் கடந்த மே 31-ந்தேதி வெளியான 'சவி' திரைப்படமும், ஆலியா பட்டின் 'ஜிக்ரா' திரைப்படமும் ஒரே மாதிரியான கதையம்சம் கொண்ட படங்களாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிறையில் இருக்கும் தனது கணவனை மீட்கப் போராடும் மனைவியின் கதையாக 'சவி' வெளியான நிலையில், சிறையில் இருந்து தனது சகோதரனை மீட்கப் போராடும் சகோதரி என்ற கதையம்சத்துடன் 'ஜிக்ரா' படம் வெளியாகியுள்ளது.

இது குறித்து திவ்யா கோஸ்லா ஒரு பேட்டியில் கூறுகையில், "இரண்டு படங்களுக்கு ஒரே மாதிரியான கதையம்சம் இருக்கலாம். ஒவ்வொரு படமும் தனக்கான தனித்துவமான பாதையை கொண்டிருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article