டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா தேர்வு

3 hours ago 1

புதுடெல்லி,

டெல்லி சட்டசபைக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு கூடுதலாக 48 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியமைத்தது. ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற, அக்கட்சியை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.

இதேபோன்று, ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான அதிஷி டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரானார். இந்நிலையில், சட்டசபைக்கு புதிதாக சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

அவர், ரோகிணி சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதனை தொடர்ந்து, முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் அதிஷி ஆகியோர் அவரை அழைத்து கொண்டு சென்று நாற்காலியில் அமர வைத்தனர்.

சட்டசபையின் 8-வது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட விஜேந்தருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கூறும்போது, உங்களுடைய வழிகாட்டுதலின் கீழ் இந்த சட்டசபையானது, நல்ல முறையில் நடைபெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது என கூறினார்.

எதிர்க்கட்சி தலைவராக, நீங்கள் பல்வேறு விவகாரங்களை எதிர்கொண்டீர்கள். பலமுறை பொது நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியிருக்கிறீர்கள். கடினம் வாய்ந்த அணுகுமுறையை நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால், நீங்கள் இந்த அவையை மென்மையாக நடத்துவீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என கூறினார்.

Read Entire Article