திரைப்பட படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு சான்றிதழ் வழங்க கோரி வழக்கு: காவல்துறை பதில்தர சென்னை ஐகோர்ட் உத்தரவு

3 hours ago 2

சென்னை: திரைப்பட படப்பிடிப்புக்கு டம்மி ஆயுதங்களை பயன்படுத்தும் தென் இந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கத்தினருக்கு சான்றிதழ்கள் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு உள்துறை செயலாளர், டி.ஜி.பி மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்னிந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் கடந்த 2022ல் தாக்கல் செய்த மனுவில், நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்கள் காரைக்குடிக்கு கொண்டு செல்லப்பட்ட போது காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்தனர்.

மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மும்பை போலீசார், படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களுக்கு எண்ணிட்டு, உரிமம் வழங்கும் நடைமுறையை வகுத்துள்ளது. அதேபோல தமிழகத்தில் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவதுடன், தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டுமென்று கோரியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டம்மி ஆயுதங்களை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், தங்கள் கிட்டங்கியை ஆய்வு செய்த காவல் துறை அதிகாரிகள், அவற்றுக்கு எண்ணிட்டனர். ஆனால், சங்க உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்க மறுத்து சென்னை காவல் ஆணையர் 2024 டிசம்பர் 20ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆயுத சட்டத்தின் அடிப்படையில் எந்த சான்றிதழும் வழங்க முடியாது எனக்கூறி பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை ரத்து செய்து, சான்றிதழும், அடையாள அட்டையும் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் பாயிண்ட் பாலாஜி ஆஜராகி, சங்கத்தின் தொழில் நடவடிக்கையில் காவல்துறை தலையிட கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post திரைப்பட படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு சான்றிதழ் வழங்க கோரி வழக்கு: காவல்துறை பதில்தர சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article