திருஷ்டி தோஷம் ஏன் வருகிறது? வராமலிருக்க என்ன வழி? வந்தால் என்ன செய்ய வேண்டும்?

1 month ago 10

கண் திருஷ்டி என்று ஒரு விஷயம் இருக்கிறது. அது ஒருவர் வாழ்க்கையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். பிறரது பார்வை காரணமாக ஒருவருக்கோ, ஒரு நிறுவனத்திற்கோ, கட்டமைப்புக்கோ அல்லது உறவு நிலைக்கோ ஏற்படுவதாகக் கருதப்படும் ஊறு (பாதிப்பு) கண்ணூறு எனப்படும். இதனை கண் திருஷ்டி, கண்ணேறு எனவும் அழைப்பர். இது தமிழர் உள்ளிட்ட சில பண்பாடுகளில் காணப்படும் நம்பிக்கை ஆகும். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள்.கண் திருஷ்டிக்கு பார்வை மட்டுமல்ல எண்ணங்களும் தான் காரணம். ஒருவர் நல்ல உடை அணிந்தாலோ அல்லது புத்தம் புது வீடு கட்டி னாலோ, கார் வாங்கினாலோ அல்லது அவருக்கு மிக நல்ல வாழ்க்கைத்துணை அமைந்தாலோ அவர் குழந்தைகள் மிக நன்றாகப் படித்தாலோ, ஒரு சிலராவது பொறாமைப் படத்தான் செய்கிறார்கள். இது சில பாதிப்புகளை ஏற்படுத்தவே செய்யும்.இந்த கண் திருஷ்டிக்கு நாமே சில நேரங்களில் காரணாமாகி விடுவோம். கண் திருஷ்டியைக் குறித்து தெரிந்துகொள்வதற்கு முன் நாம் உலகத்தை (உலகின் உளவியலை) புரிந்து கொள்ளவேண்டும் உலகத்தைப் புரிந்துகொண்டால் தான் வாழமுடியும்.

எந்தத் துறையிலும் மிகப்பெரிய சாதனை செய்தவர்கள் உலகத்தின் தன்மையை புரிந்து கொண்டவர்கள் அதனால் அவர்கள் உலகத்தின் பாராட்டுகளையோ பழிச் சொற்களையோ எண்ணி பாதிப்படையாது தொடர்ந்து தங்கள் செயல்களைச் செய்து வெற்றி பெற்றார்கள். உலகம் ஒருவரை எப்படியெல்லாம் நினைக்கும் என்பதை ஒரு பழைய பாடல் சொல்கிறது. நீங்கள் எப்படி இருந்தாலும் அது உங்களை விமர்சிக்கும்; குறைகூறும் சாதாரணமாக உலக வழக்கைப் பாருங்கள். பருமனாக இருந்தால், என்ன சார் கொலஸ்ட்ராலா? என்பார்கள் அதே ஒல்லியாக இருந்தால், என்ன சார் சுகரா? என்பார்கள் கோபமாக இருந்தால் என்ன அடிக்கடி கோபப்படுகிறீர்கள், பிரஷரா? என்பார்கள். சரி ஏன் வம்பு என்று மௌனமாக ஒதுங்கிநின்றால், என்ன சார், எதாவது பிரச்சனையா? என்பார்கள். ஆக, எப்படி இருந்தாலும் கேள்வி உண்டு. நீங்கள் ஓஹோ என்று இருந்தால் மனதுக்குள் வெறுப்பார்கள் விழுந்து விட்டால் வாய்விட்டு சிரிப்பார்கள். இல்லாதவர்கள் கேட்டால் ஏளனம் செய்வார்கள் இருப்பவர்கள் கேட்டால் நடிப்பென மறுப்பார்கள். இதுதான் உலகம் இந்த இயல்பைப் புரிந்துகொண்டால் பிறர் திருஷ்டி யிலிருந்து தப்பிக்கலாம்.என் நண்பர் ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

அவருக்கு வெகு நாட்களாக கிடைக்காமல் இருந்து கிடைத்த வாய்ப்பு இது. ஆனால் தெரியாத்தனமாக “நண்பர்கள் வாழ்த்துவார்கள்” என்று முகநூலில் பதிவிட்டுவிட்டார் விளைவு நிறைய பாராட்டுக்கள். ஆனால் அந்த பாராட்டுக்களில் 90 சதவீதத்திற்கு மேல் ஆற்றாமையும் பொறாமையும் நிரம்பி இருந்தன. இது தவிர நிறைய விசாரிப்புகள். எப்படி வாய்ப்பு கிடைத்தது? யார் உதவினார்கள்? எப்படி அவர்களை பிடித்தாய்? அதற்குப் பின் அவருக்கு அடுத்த வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை. இந்த அனுபவத்திற்குப் பின் முகநூலில் தனது எந்த முன்னேற்றத்தையும் வாய்ப்பையும் பற்றி அவர் பதிவிடுவதே இல்லை ஏன் என்று கேட்டதற்கு தான் கற்ற பாடத்தை ஒரு டைரியில் எழுதி என்னிடம் காண்பித்தார். உலகத்தைப் புரிந்து கொண்டு வாழாத வரை வெற்றி இல்லை. சமூக ஊடகத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் அதில் ஏதேனும் உப்பு சப்பில்லாத விஷயத்தைப் போடுங்கள் அதை படிப்பவர்கள் உங்களை ஒன்றுக்கும் உதவாது வீணாக காலத்தைப் போக்குபவன் என்றே கருதட்டும். உண்மையில் நம் முன்னேற்றத்தை பெரும்பாலோர் விரும்புவ தில்லை என்பதை இன்று புரிந்து கொண்டேன் என்று எழுதி இருந்தார். இதுதான் உண்மை. உலகத்தின் இந்த சுபாவத்தில் தான் நம் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிர்மறை சக்தியான திருஷ்டி மறைந்திருக்கிறது. உலகத்தின் இந்த சுபாவத்தை நம்மால் மாற்ற முடியாது. நாம்தான் உலக சுபாவத்துக்கு தகுந்த மாதிரி மாறிக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலோர் தங்கள் பெருமைகளையும் மனக்குறை களையும் தகுதி யற்ற நபர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் அடையும் பாதிப்பு அதிகம். அவர்கள் பொறாமையால் உங்கள்துன்பங்கள் உங்கள் தவறான நடவடிக்கையால் வந்தது என்று பறைசாற்றுவார்கள். அதே நேரம் உங்கள் முன்னேற்றத்தை பொறாமையோடும் ஆற்றாமை யோடும் ஆனால் வெளியில் போலிப்புன்னகையோடும் வாழ்த்து சொல்லுவது போல் நடிப்பார்கள்.ஒரு நண்பர் தன் மகனுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சொன்னார். எங்கள் குழுவிலிருந்த இன்னொரு நண்பர் ‘‘அப்படியா சந்தோசம் சார்’’ என்றார். ஆனால் அவர் முகத்தில் ஓர் சோகமும் பொறாமையும் தென்பட்டது. கலகலப்பாகப் பேசும் அவர் அதன் பிறகு இரண்டு நாட்கள் டல்லாகவே இருந்தார் அப்புறம் விசாரித்த போது, ‘‘சார் அவர் “கொடுத்து வைத்தவர்”. என் பையன் மூன்று வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறான். ‘‘ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை’’என்றார்.அவர் சொன்ன வார்த்தைகளின் அமைப்பும் சொல்லும் விதமும் (voice modulation) நமக்கு சில உண்மைகளை உணர வைத்தன.
அவர் மகனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை விட இவருக்கு கிடைத்துவிட்டது என்ற மன உளைச்சல், ‘‘அவர் கொடுத்து வைத்தவர்” என்ற வார்த்தையின் அழுத்தத்தில் தெரிந்தது. இரண்டு நாட்கள் கழித்து தன் மகனுக்கு வாய்ப்பு கிடைத்தது என்று சொன்னவர் ‘‘சார் அந்த வாய்ப்பு திடீரென்று கேன்சல் ஆகிவிட்டது’’ என்றார்.

இந்த நண்பர் அப்பொழுது பதற்றமாக, ‘‘ஏன் சார் ஏன் சார்” என்று கேட்டார் அந்த பதற்றத்தில் ஒரு சிறு நிம்மதியும் சந்தோஷமும் வெளிப்பட்டது. திருஷ்டி என்று சொன்னது இதைத்தான். எண்ணங்கள் தான் திருஷ்டி. இதற்கு தீர்வும் உண்டு. குழந்தைகள் எனும்போது அதாவது ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் எனும்போது தினமும் இரண்டு சூடத்தை சுற்றிப் போடவேண்டும். சூடம் இல்லாதபோது சிறிது உப்புக்கல்லை சுற்றி நீர் உள்ள இடம் அல்லது பாத்திரங்கள் கழுவும் பேசினில் போடவேண்டும்.அதுவே பெரியவர்கள் அல்லது முழுக்குடும்ப உறுப்பினர்களுக்கும் ஞாயிறு அன்று இரவு ஒரு எலுமிச்சைப் பழத்தில் சூடம் ஏற்றி அனைவரையும் சுற்றி வீட்டு வாசலில் சூடத்தை விட்டுவிட்டு எலுமிச்சம்பழத்தை இடது காலால் நசுக்கி அந்தத் தோலை இரண்டாகப் பிய்த்து தலையைச்சுற்றி எறிந்துவிடவும்.இதைவிட முக்கியம் நீங்கள் உங்கள் குறைகளை-முயற்சிகளை-முன்னேற்றங்களை உங்கள் தாய், தந்தை மனைவி குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் யோசித்துத் தான் சொல்ல வேண்டும். நிச்சயம் உங்கள் முன்னேற்றத்தை விரும்புவார்கள் (well-wishers) என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டும்தான் நீங்கள் பரிமாறிக்கொள்ள வேண்டும். அப்படி யாரும் இல்லாவிட்டால் உங்கள் குறைகளையும் முயற்சிகளையும் முன்னேற்றங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு இடம் இருக்கிறது அதுதான் கோயில். அங்குள்ள மூர்த்தியிடம் உங்கள் சந்தோஷத்தையோ துன்பத்தையோ பகிர்ந்து கொள்ளுங்கள். சந்தோஷம் அதிகரிக்கும் துக்கம் நீங்கிவிடும்.

தேஜஸ்வி

The post திருஷ்டி தோஷம் ஏன் வருகிறது? வராமலிருக்க என்ன வழி? வந்தால் என்ன செய்ய வேண்டும்? appeared first on Dinakaran.

Read Entire Article