
சென்னை:
திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் உற்சவர் சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்திற்காக உற்சவர் கல்யாண சுந்தரர், திரிபுரசுந்தரி அம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க காலை 11.20 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நிறைவில் மகா தீபாராதனையும், மதியம் 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவமும் நடைபெற்றது.