
தஞ்சாவூர்,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"உலக நாடுகளுடன் தொடர்பு கொள்வதற்கு எப்படி ஆங்கிலம் தேவைப்படுகிறதோ, அதே போல் இந்தியா முழுவதும் பொது தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்தலாம். நான் டெல்லி சென்றபோது அங்குள்ள கடைக்கு சென்று பேசுவதற்கு நிறைய கஷ்டப்பட்டேன். இந்த கஷ்டம் பல பேருக்கு தெரியும்.
தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என்று சொல்பவர்களுக்கு மூன்றாவது மொழி தேவையில்லை. நான் மிகவும் மதிக்கும் தலைவரான பேரறிஞர் அண்ணா, இந்தியாவிற்கு காலப்போக்கில் ஒரு பொதுவான தொடர்பு மொழி உருவாக வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த மொழி இந்தி என்று அண்ணா கூறவில்லை. ஆனால் அவர் அதை கோடிட்டு காட்டியிருக்கிறார்.
ஒரு தமிழனாக நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். நான் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்கிறேன். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, சாலையில் நான் சந்தித்த, தினக்கூலியாக வேலை செய்யும் நபர்களிடம் கேட்டபோது, 'எங்கள் பிள்ளைகள் மூன்றாவது மொழியை படித்தால் என்ன தவறு?' என்றுதான் சொல்கிறார்கள்."
இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.