திருவொற்றியூர்: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருந்து எண்ணூர் முதல் காசிமேடு வரை உள்ள கடலோர மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகுகள் மூலம் மீன்பிடிக்க செல்கின்றனர். மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்படும் 1500க்கும் மேற்பட்ட படகுகள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்படுகின்றன. குறைவான இடத்தில் அதிகப்படியான விசைப்படகுகள் நிறுத்தப்படுவதால் இடநெருக்கடி ஏற்பட்டு வந்தது.இதையடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் விசைப்படகு, பைபர் படகுகளை பாதுகாக்கவும் நெரிசல் இல்லாமல் நிறுத்தவும் தேவையான அடிப்படை வசதிகளுடன் திருவொற்றியூர் குப்பத்தில் ரூ.272.70 கோடி மதிப்பீட்டில் சூரை மீன்பிடி துறைமுகம் கட்டும் பணி கடந்த 2019ம் ஆண்டு துவங்கியது.
இந்த துறைமுகத்தில் 400 கில் நெட் படகுகள், 250 பைபர் படகுகள் நெரிசல் இல்லாமல் நிறுத்த முடியும். மேலும் நடைபாதை, மீன் ஏலம் விடும் கூடம், படகுகள் பழுதுபார்க்கும் மையம், மீன்பிடி வலைகள் பழுதுபார்க்கும் கூடம், செல்போன், வயர்லெஸ் தொலைத் தொடர்பு அறை, ஓய்வறை, உணவகம், கழிவறை உள்பட அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மினி துறைமுகத்தில் 60 ஆயிரம் டன் மீன்களை கையாளும் வசதி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மீன் விற்பனை, ஏற்றுமதி பெருகுவதுடன் சூரை மீன்பிடி துறைமுகத்தின் மூலம் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு பெற வாய்ப்புள்ளது. இந்த சூரை மீன்பிடி துறைமுகத்தை வருகின்ற 28ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதையடுத்து அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் மீன்வளத்துறை அதிகாரியுடன் சூறைமீன் பிடி துறைமுகத்தை இன்று ஆய்வு செய்தனர்.
The post திருவொற்றியூரில் சூரை மீன்பிடி துறைமுகம்; 28ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்: அமைச்சர்கள் இன்று ஆய்வு appeared first on Dinakaran.