புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1000 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான அரசாணையையும், திருநங்கைகள் உள்பட 195 பேருக்கு வீட்டு மனை பட்டாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை திருச்சி வந்தார்.
2ம் நாளான இன்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அரசு திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் காலை 10 மணிக்கு நடந்தது. கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார். இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூட்டத்துக்கு தலைமை வகித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை முடிந்துள்ள அரசு திட்ட பணிகள், நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதன்பிறகு கலெக்டர் அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கு விழாவில் பங்கேற்றார். இதில் பழங்குடியினர் இனத்தவர்கள்(நரிக்குறவர்கள்) 125 பேருக்கு ரூ.3.59 கோடி மதிப்பில் வீட்டு மனை பட்டா வழங்கினார். தொடர்ந்து ரு்.1.45கோடியில் 50 பேருக்கு அரசாணை எண் 97ன் படி ஆட்சேபனையற்ற புறம்போக்கில் வரன்முறைப்படுத்திய வீட்டுமனை பட்டாவை வழங்கினார். பின்னர் 20 திருநங்கைளுக்கு ரூ.,49,19,850மதிப்பில் விலையில்லா வீட்டு மனைபட்டாவும், 1000 பேருக்கு 35 கோடி மதிப்பில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணை என மொத்தம் 1,195 பேருக்கு ரூ.40கோடியே 54 லட்சத்து 50ஆயிரத்து 917 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இதைதொடர்ந்து 12.30 மணிக்கு புதுகை கற்பக விநாயக திருமண மண்டபத்தில் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக இளைஞரணியின் பங்கு மற்றும் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பேசினார். இதைதொடர்ந்து புதுகையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் மாலை 4 மணிக்கு புதுகை ஏஎன்எஸ் பிரைடு ஓட்டலில் திமுக மூத்த நிர்வாகி துரை.மாணிக்கம் படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதன்பிறகு புதுக்கோட்டை 9-ஏ நத்தம்பண்ணையில் மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடுகிறார். ெதாடர்ந்து திருச்சி பைபாஸ் சாலை பள்ளத்துவயல் பகுதியில் திமுக மருத்துவரணி கருத்தரங்கில் பங்கேற்று பேசுகிறார். இதன்பிறகு கீரனூர் அருகே இளயவயல் கல்லுகுமியல்பட்டியில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு திருச்சிக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். அங்கு திருச்சி கோர்ட் யார்டு ஓட்டலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்குகிறார்.
The post புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா; கலைஞர் கனவு இல்லம் கட்ட 1000 பேருக்கு அரசாணை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.