அதிசயமாக நடைபெறும் அர்த்தஜாம பூஜையும் அன்னையின் தங்கப் பாவாடை தரிசனமும்!

3 hours ago 3

பஞ்ச உபசார தீபாராதனை

நாடெங்கிலுமுள்ள எண்ணற்ற திருக்கோயில்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகள் நம்முடைய கலை, கலாச்சார பண்பாடு மிக்க வாழ்க்கை வெளிப்பாடுகள் அக வாழ்க்கைக்கும், புற வாழ்க்கைக்கும் இனிமையும் சுவையும் தருவனவாகும். அத்தகைய வழிபாடுகளில் சிறப்புக்குரிய ஒன்றாக விளங்குவது சங்கரன் கோயிலில் நடைபெறும் ‘அர்த்தமுள்ள அர்த்த ஜாம பூஜை’ வழிபாடாகும். தினந்தோறும் இரவில் சங்கரன் கோயில் அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயிலில் சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராண சுவாமி, கோமதி அம்பாள் ஆகிய மூவருக்கும் அர்த்தசாமப் பூஜை நடைபெறுகிறது. அப்போது பஞ்ச உபசார தீப ஆராதனை காட்டப்படுகிறது. ஓதுவார் மூர்த்திகள் இனிய குரலெடுத்து தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களைப் பாடுகிறார்கள்.

அவர்களுடன் கூடவே கட்டியங்காரர் இருக்கிறார். இங்கே சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்வதில்லை. அர்த்த ஜாமப் பூஜையின் போது அம்மன் சந்நதியில் பால் நிவேதனம் செய்யப்படுகிறது. அந்தப் பால் பருகினால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அருளுகிறாள் அன்னை கோமதி. ஆதிசங்கரர் பகுத்தளித்த சாக்த வழிபாட்டின்படி, அன்னை கோமதிக்கு இங்கே கோமதீய வழிபாடும் அமைந்துள்ளது. கோமதீயம் என்றால் பல்லாயிரக்கணக்கான தெய்வங்கள் நிறைந்துள்ள பசுவின் திருமேனியில் பொலியும் ‘‘சுயம்பிரகாச கோசதீப ஞானம்’’ என்று பொருள். இதுவே ‘கோமதீய ஜோதி’ என்று எளிமையாக சொல்லப்படுகிறது. கோமதீய ஜோதியானது கண்ணுக்குத் தெரியாத வாயு அம்ச ஜோதி.

வெள்ளை வஸ்திரம்

இது அருணாசல ஜோதியின் ஓர் அம்சம் ஆகும். ஆராதனைக்குப் பின் சுவாமிகளுக்கு வெள்ளை வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது. அதன் பின் சங்கரலிங்கப் பெருமான் கோயிலில் மூலஸ்தானத்தில் உள்ள ‘‘திருப்பாத வடிவில்’’ உள்ள சொக்கரை சிவிகையில் ஏற்றி பள்ளியறை உள்ள கோமதி அம்பிகை சந்நதிக்கு மேளதாளத்துடன் கொண்டு வருகின்றனர்.

அதன் பின்னர் பள்ளியறையில் உள்ள ஊஞ்சலில் வைக்கின்றனர். சுவாமியும் அம்பாளும் இருப்பதற்கு தங்க ஊஞ்சலாலான பள்ளியறை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியறையின் உள் பகுதியில் மரகதக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பள்ளியறையில் உள்ள தங்க ஊஞ்சலில் சொக்கர் பாதுகையை வைத்து பூஜை செய்கின்றனர்.

கிண்ணத்தில் பசும்பால்

கோமதி அம்பிகைக்கு தீபஆராதனைகள் மீளவும் செய்து சக்தி பீட வடிவிலிருக்கும் மீனாட்சியை அழைத்து வந்து தங்க ஊஞ்சலில் இருக்கும் சொக்கர் பாதுகையின் இடது பக்கத்தில் சேர்த்து வைக்கிறார்கள். அங்கு ஒரு தாம்பூலப் பெட்டி உள்ளது. அதில் ஏலக்காய், கிராம்பு முதலியவை வைக்கப்படுகிறது. கூடவே வெள்ளிக் கிண்ணத்தில் பசும்பால் வைக்கிறார்கள். இப்பூஜை நடைபெறும் போதுபொன்னூஞ்சல் முதலிய ஊஞ்சல் பாட்டுகளை நாதசுரம் மூலம் வித்துவான்கள் இனிமையாக இசைக்கின்றனர். தேவகானமாக ஒலிக்கிறது.

ஊஞ்சல் பூஜை இனிது நடைபெற்ற பின்னர், கற்பூர தீபாராதனை காட்டி, பக்தர்களுக்கு விபூதிப் பிரசாதத்துடன் பாலும் வழங்கப்படுகிறது. ‘‘ஊஞ்சல் உற்சவம்’’ என்று இங்கு தினந்தோறும் இப்படி நடைபெறும் அர்த்தஜாமப் பூஜையைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், குடும்பத்தில் அமைதி நிலவவும், கணவன் மனைவி ஒற்றுமைக்கும் இப்பூஜை நடைபெறுகிறது என்று சொல்கிறார்கள். இந்த அர்த்த ஜாம வழிபாட்டுடன் ஆலயத்தின் நாள் வழிபாட்டுப் பூஜை நிறைவு பெறுகிறது.

மகப்பேறு கிட்டும்

அர்த்த ஜாமப் பூஜை முடிந்த பின் தரப் படும் பிரசாதப் பாலை தொடர்ந்து வந்து 30 நாட்கள் வழிபட்டுப் பருகினால் மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம்! வாழ்வில் ஒரு முறையேனும் வந்து தரிசித்துப் பிறவிப்பயனை அசைய வேண்டிய அற்புத திருத்தலம் இந்த சங்கரன் கோயில். ஸ்ரீ கோமதி அம்மனின் சந்நதி திருக்கோயிலின் வடபுறத்தில் தனிக் கோயிலாகத் திகழ்கிறது. இங்கும் கொடி மரம் பலிபீடம், நந்தி ஆகியன உள்ளன.

சுற்றுப் பிராகாரங்களுடன் கூடிய அம்மன் சந்நதிக் கருவரையில் கருணை ததும்பும் முகத்துடன் தவக்கோலத்தில் காட்சி தருகிறாள் ஸ்ரீ கோமதி அம்மன்! ‘கோ’ என்றால் ‘பசு என்று பொருள்படும் ‘மதி’ என்றால் ஒளி நிறைந்த என்று பொருள். ஒளி மிகுந்த திருமுகம் கொண்ட இந்த அம்பாள், பசுக்களாகிய தேவர்களைக் காப்பவள் ஆதலால் இவளுக்கு கோமதி என்று பெயர்.

ஆவுடையம்மன் என்ற பெயரும் இவளுக்கு உண்டு. ஸ்ரீ மதுரை மீனாட்சி, சங்கரன் கோயில் ஸ்ரீ கோமதி, நெல்லை ஸ்ரீ காந்திமதி மூவரையும் முறையே இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என முப்பெரும் சக்திகளாக சித்தரிப்பர். கோதியம்மன் சந்நதி முன் உள்ள ஸ்ரீசக்கரம் மகிமை வாய்ந்தது. இதை பிரதிஷ்டை செய்தவர் திருவாவடுதுறை ஆதினம 10-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள்.

தங்கப் பாவாடை

இந்த ஸ்ரீ சக்கரம் பதிக்கப்பட்ட பள்ளத்தில் அமர்ந்து அம்மையைத் தியானித்து வழிபட்டால், எண்ணிய காரியம் நிறைவேறும் பிணிகள் மற்றும் பில்லி சூனியம் போன்றவை அகலும் என்பது ஐதீகம். பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் இந்த இடத்தில் பத்து நாட்கள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து சுலோகங்கள்கூறி அம்பாளை வழிபட்டால் மகப்பேறு நிச்சயம் உண்டு என்கிறார்கள்.

இந்த அம்பாளுக்கு திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு பூப்பாவாடை; செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 5.30-மணிக்கு தங்கப்பாவாடை சார்த்தப்படுகிறது. தவிர, தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் தங்கப்பாவாடை அணிவிக்கப்படுகிறது. பிரதி மாதம் கடைசித் திங்களன்று முழுக்காப்பும், தமிழ் மாதப் பிறப்பன்று இரவு 7.00 மணிக்குத் தங்கப்பாவாடை சார்த்து தலுடன் தங்கத்தேர் உலாவும் நடைபெறுகிறது.

சகோதரி மீனாட்சி

ஸ்ரீகோமதி, மதுரை ஸ்ரீ மீனாட்சியின் சகோதரியாகக் கருதப்படுவதால், ஸ்ரீகோமதியை தரிசிக்கும் முன், ஸ்ரீ மீனாட்சியைத் தரிசித்து, “தாயே உன் சகோதரியைக் காணச் செல்கிறேன். எனக்கு நல்லருள் புரிவாய்!’’ என்றுகூறி வழிபட்டுச் செல்வதுடன், ஸ்ரீகோமதியை தரிசித்த பின்னர் மீண்டும் மதுரை வந்து மீனாட்சியிடம் “தாயே உன் சகோதரியை நன்றாக தரிசித்தேன். மிகவும் நன்று,’’ என்றுகூறி வழிபட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

இதனால் பல நன்மைகள் ஏற்படும் என்கிறார்கள். அன்னை கோமதிக்கு மாவிளக்கு தீபம் ஏந்தி வழிபடுவது மிகவும் சிறப்பு. அன்னையின் முன், பிறந்த குழந்தைகளைத் தத்துக் கொடுத்து வாங்கும் சடங்கைச் செய்கிறார்கள். வேண்டுதல் நிமித்தம் செவ்வரளி மலர்களைப் பரப்பி அதன் நடுவே இரட்டைத் தீபங்கள் ஏற்றி வைத்தும் வழிபடுகிறார்கள்.

அமைவிடம்: ராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து மிக அருகில் சங்கரன்கோவில் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து சுமார் 64கி.மீ., தூரத்திலும் சங்கரன்கோவிலை அடையலாம்.

முத்துரத்தினம்

The post அதிசயமாக நடைபெறும் அர்த்தஜாம பூஜையும் அன்னையின் தங்கப் பாவாடை தரிசனமும்! appeared first on Dinakaran.

Read Entire Article