திருத்தணி: திருவாலஙகாடு ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த சதி தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து 100 பேரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வழியாக ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் பல்லாயிர கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே அரிச்சந்திராபுரம் பகுதியில் சிக்னல் கிடைக்காததால், சென்னையில் இருந்து மும்பை சென்ற விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள லைன் மேன் சோதனை செய்தபோது, சிக்னலுக்கு அருகில் கிப்ளிங் இணைப்பு பகுதியில் 2 இடங்களில் நட்டு, போல்ட்கள் கழட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வரா தலைமையில் உயர்மட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தண்டவாளம் சரி செய்யப்பட்டு வழக்கம் போல ரயில்கள் இயக்கப்பட்டன. ரயிலை கவிழ்க்க நடந்த சதியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், திருவாலங்காடு ரயில் நிலையம் மற்றும் அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து 100 பேரிடம் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு ரயில் நிலைய மேலாளர் தணிகைமலை கொடுத்த புகாரின்பேரில் ரயிலை கவிழ்க்க சதி, பொது சொத்து சேதம், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சதி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் திருவாலங்காடு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
The post திருவாலங்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து 100 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.