
திருவாரூர்,
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.
அதன்படி, ஆழித்தேராட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. காலை 9 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அத்துடன் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடிக்கப்படும். முன்னதாக காலை 5.30 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்குகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருளுகிறார்.
திருச்சி பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்களுடன் எளிதில் நிறுத்தும் வகையில் ஹைட்ராலிக் பிரேக் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது பனஞ்சப்பைகள் 5 டன், மூங்கில் 50 டன், சவுக்கு 10 டன், கயிறு ஒரு டன், துணிகள் ½ டன், தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு ஆழித்தேரின் மொத்த எடை 350 டன்னாகும்.
தேரை இழுக்க சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை 4 டன். தேரின் பின்புறம் தள்ள 2 புல்டோசர்கள், 4 வீதிகளில் தேரை திரும்பவும், செலுத்தவும் முட்டுகட்டைகள், இரும்பு தகடுகள் பயன்படுத்தப்படுகிறது. அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருள 4 வீதிகளிலும் தேர் அசைந்து ஆடி திரும்பும் அழகை காண கண் கோடி வேண்டும் என மக்கள் கூறுவார்கள்.
விழாவையொட்டி திருவாரூர் நகராட்சி மூலம் பக்தர்கள் வசதிக்காக நகரின் தேரோடும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆழித்தேருடன் விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் அலங்கரிக்கும் பணி நிறைவு அடைந்துள்ளது. பிரமாண்ட ஆழித்தேரை பக்தர்கள் கண்டு ரசித்து, செல்போன் மூலம் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தேரோட்டத்தை காண வெளி மாவட்டங்களில் இருந்து சிவனடியார்கள் திருவாரூருக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.