சென்னை: சென்னை மாவட்ட திருக்கோயில் சார்பில் திருவான்மியூரில் வரும் 21ம் தேதி 31 மணமக்களுக்கு இலவச திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்க உள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் வரும் 21ம் தேதி திருவான்மியூரில் 31 இணைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை வழங்குகிறார். அதேநாளில், மாநிலம் முழுவதும் 304 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளன. சென்னையில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களுக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் பட்டு வேட்டி, சட்டை, துண்டு மற்றும் பட்டு புடவைகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: இந்தாண்டு 700 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை, திருவான்மியூரில் வரும் 21ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் 31 இணைகளுக்கு மங்கல நாண் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைப்பதோடு சீர்வரிசை பொருட்களையும் வழங்குகிறார். அதேநாளில் தமிழகம் முழுவதும் 304 இணைகளுக்கு திருமணங்கள் நடைபெற உள்ளன. மணமக்கள் எல்லா நலமும், வளமும் பெற்று முதல்வரை போல் கடுமையான ஓய்வில்லாத உழைப்பாளிகளாகவும், மங்காத புகழுக்கு சொந்தக்காரர்களாகவும் நீங்கள் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் சுகுமார், திருமகள், ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் லட்சுமணன், ஜெயராமன், மங்கையர்க்கரசி, வான்மதி, ரேணுகாதேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post திருவான்மியூரில் வரும் 21ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31 மணமக்களுக்கு இலவச திருமணம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.