திருவாடானை, ஏப்.26: திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறை கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வருவாய் துறை அமைச்சர், வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணி நியமனத்தை மீண்டும் 25 சதவீதமாக அதிகரிக்க வேண்டுதல், அனைத்து வருவாய்துறை பணியாளர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டுதல், வருவாய்த்துறை பணியாளர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டு இருந்தது.
அதன் மீது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருவாய் துறை கூட்டமைப்பு சார்பில் மாவட்ட மற்றும் வட்ட தலைநகரங்களில் ஒரு மணி நேர வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை கூட்டமைப்பின் சார்பில், மாலை 5 மணி அளவில் ஒரு மணி நேர வெளிநடப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள், நில அளவை பிரிவு பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
The post திருவாடானையில் வருவாய் துறை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.