திருவாடானை: திருவாடானை அருகே புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாண்டுகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டின் கீழ் அரசூர் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு கிராம சுகாதார செவிலியர் ஒருவரும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் ஒரு செவிலியரும் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தனர். இங்கு, அரசூர், பெரியகீரமங்கலம், சின்னகீரமங்கலம், பாரூர், சேந்தனி, சானாவயல், வத்தாப்பெட்டி, நற்கனியேந்தல், கல்லூர், பாரதிநகர், ஆட்டூர், கோவணி, கருமொழி உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சளி, காய்ச்சல் சிகிச்சைக்கும், விஷ பூச்சி, பாம்பு கடித்தலுக்கு முதலுதவிக்கும் வந்து சென்றனர். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால சிகிச்சை வழிமுறையும் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், துணை சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் இருந்ததால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. பின்னர், அதே இடத்தில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் கடந்த 2021-22ஆம் ஆண்டு 15வது நிதிக்குழு மானிய நிதியில் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதையடுத்து புதிய துணை சுகாதார நிலைய கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தப் பணியானது கடந்த பல மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. ஆனால், அதன்பிறகு புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் இது வரை பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.
இதனால், இப்பகுதியில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவசர கால முதலுதவி சிகிச்சைக்கும், கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு கால சிகிச்சைக்கும் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாடானை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருவாடானை அருகே புதிய துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.