திருவள்ளூர் விபத்து; 15 மணி நேரத்தில் ரெயில் போக்குவரத்து சீராகும் - தென்னக ரெயில்வே பொதுமேலாளர் தகவல்

2 hours ago 3

திருவள்ளூர்,

மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்பட்டது.

ரெயில்கள் மோதிக்கொண்ட வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. மணிக்கு 109 கி.மீ. வேகத்தில் சென்ற ரெயில், விபத்து நடந்த இடத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது. ஒடிசா ரெயில் விபத்து போல், சிக்னல் கோளாறு காரணமாக கவரப்பேட்டையில் ரெயில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேரில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மெயின் லைனில் பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மெயின் லைனுக்கு பதிலாக லூப் லைனுக்கு ரெயில் தடம் மாறியதால் விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தடம்புரண்ட 11 பெட்டிகளையும் கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சேதமடைந்த தண்டவாளம் மற்றும் சிக்னல்களை சரிசெய்ய வேண்டும். இதனால் இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, சுமார் 15 மணி நேரத்தில் ரெயில் போக்குவரத்து சீராகும்" என்று தெரிவித்தார். 


Read Entire Article