திருவள்ளூர்,
மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்பட்டது. ரெயில்கள் மோதிக்கொண்ட வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. மணிக்கு 109 கி.மீ. வேகத்தில் சென்ற ரெயில், விபத்து நடந்த இடத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது. ஒடிசா ரெயில் விபத்து போல், சிக்னல் கோளாறு காரணமாக கவரப்பேட்டையில் ரெயில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரெயில் விபத்து நடந்த பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை அகற்றுவதில் மற்றும் புதிய தண்டவாளம் அமைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது இருப்பினும் இன்று மாலைக்குள் மீட்பு ப்பணிகள் நிறைவடைந்து ரெயில் போக்குவரத்து சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது . அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது