திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் பயணிகள்: சுரங்கப் பாதை பணிகளை முழுமையாக முடிக்காததால் அவதி

2 months ago 4

திருவள்ளூர்: சென்னையிலிருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மற்றும் காட்பாடி, திருப்பதி, மும்பை, பெங்களூர், விரைவு ரயில்களும், மின்சார புற நகர் ரயில்கள் என தினமும் 200க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், மின்சார ரயில்களும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்றும், கடந்தும் செல்கின்றன. மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் இருந்து நாள்தோறும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள், வேலைக்கு செல்லும் ஆண், பெண் தொழிலாளர்கள் என ஒரு லட்சம் பேர் வரை திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

திருவள்ளூரிலிருந்து சென்னைக்கும், அரக்கோணத்திற்கும் செல்லும் ரயில்கள் அதிகளவில் பயணிகள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ரயில் நிலையமாக இந்த திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது. கடந்த 2019ல் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை, மற்றும் எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடை, முதியவர்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாததால் அவர்களின் வசதிக்காக லிப்ட் வசதி, ஆகியவை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

2019ல் கொரோனா தொற்று காரணமாக சுரங்கப்பாதை கட்டமானப் பணிகள் காலதாமதமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. ஆனால் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் 06.08.2023 அன்று அவசர கதியில் சுரங்க பாதை திறக்கப்பட்டது. ரயில் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கை, மழை நீர் ஒழுகுதல், மின் விளக்கு போன்ற ஒரு சில பணிகள் நிறைவடையாததால் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட ரூ.6 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த பணியானது 2 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ரயில் பயணிகளின் அத்தியாவசிய பணிகள் முடிவடையாமல் இருப்பதால் ரயில் பயணிகள் ஆபத்தான நிலையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலையே மேலும் தொடர்கிறது. அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்ல சாய்தளம் அமைக்க வலியுறுத்தியும் அது சம்மந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் சாய்தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பொது மக்கள், பயணிகள் ரயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மீதமுள்ள சுரங்கப்பாதைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? மேலும் முதியவர்கள் படியில் ஏறி, இறங்க முடியாத காரணத்தால் லிப்ட் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்றும், எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடையே முதல் பிளாட்பாரத்திலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

The post திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் பயணிகள்: சுரங்கப் பாதை பணிகளை முழுமையாக முடிக்காததால் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article