திருவள்ளூர்,
மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
ரெயில்கள் மோதிக்கொண்ட வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன. மணிக்கு 109 கி.மீ. வேகத்தில் சென்ற ரெயில், விபத்து நடந்த இடத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது. ஒடிசா ரெயில் விபத்து போல், சிக்னல் கோளாறு காரணமாக கவரப்பேட்டையில் ரெயில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு ரெயில்வே அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். பயணிகள் விரைவு ரெயிலின் ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திகு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து நேர்ந்த இடத்தில் மருத்துவ வசதி உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளையும் தயாராக வைத்திருக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவ உதவிகள், குடிநீர் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் விபத்து நடந்த பகுதிக்கு அமைச்சர் நாசர் விரைந்துள்ளார். விபத்து நடந்த பகுதிக்கு 22 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரெயில் விபத்து தொடர்பாக அவசர உதவிக்கு 044-25354151, 044-24354995 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.