திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் தீ விபத்து - காரணம் என்ன..?

8 hours ago 3

சென்னை,

சென்னை திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொளுந்துவிட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதுமே கரும் புகை மண்டலம் போல காட்சியளிக்கிறது. ரெயிலில் எரிபொருட்கள் இருப்பதால் தீ மேலும் பரவும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்தத்தும் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். 10 க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதன்படி சென்னை சென்டிரலில் இருந்து கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதிகாலையிலேயே ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் 3 வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. சரக்கு ரெயில் தீ விபத்து குறித்து தெற்கு ரெயில்வே விசாரணக்குழு அமைத்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவு ரெயில் செல்லும் வழித்தடத்தில் எந்த பாதிப்பும் இல்லை, இருப்பினும் பயணிகள் பாதுகாப்பிற்காக ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே ரெயில் எரிவதை வேடிக்கை பார்க்க யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சரக்கு ரெயிலின் அடுத்தடுத்த பெட்டிகளுக்கு தீ பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சரக்கு ரெயிலின் பெட்டிகளை பிரிக்க ரெயில்வே துறையினர் உதவ தீயணைப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை சரக்கு ரெயிலின் 5 பெட்டிகளில் தீ பரவியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் சரக்கு ரெயில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து செல்லும் ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு வந்தே பாரத் ரயில் சென்னை சென்டிரலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ், காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை அதிவிரைவு ரெயில்களும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அரக்கோணம் வழியாக சென்னை சென்டிரல் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது

மங்களூருவில் இருந்து காலை 6:10க்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வரவேண்டிய சென்னை சென்டிரல் மெயில் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டுள்ளது.

சரக்கு ரெயிலில் ஏற்பட்டுள்ள பயங்கர தீயினால் அந்த பகுதி கரும் புகை சூழ்ந்து காட்சி அளித்து வருவதால், சென்னை- திருப்பதி சாலை போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article