
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரின் கவுரி நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கேமரா பொருத்தப்பட்ட ஹெல்மெட்டை அணிந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரை 'ஹெல்மெட் மனிதன்' என்று இணையவாசிகள் அழைத்து வருகின்றனர்.
நீண்ட காலமாக அவரது குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவரது பக்கத்து வீட்டுக்காரர்களான சதீஷ் சவுகான், பலிராம் சவுகான் மற்றும் முன்னா சவுகான் ஆகியோரிடமிருந்து அவரது குடும்பத்தினருக்கு தொடர்ச்சியான கொலை மிரட்டல்கள் வந்துள்ளது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் போலீசார் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தனது பாதுகாப்புக்காக கேமரா பொருத்திய ஹெல்மெட் அணிந்து செல்வதாக அவர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த ஹெல்மெட் கேமரா ஒரு தந்திரம் அல்ல; இது என்னுடைய கேடயம். நாங்கள் பாதுகாப்பு கேட்டு மன்றாடினோம். அது கிடைக்காததால், நான் செல்லும் எல்லா இடங்களையும் வீடியோ பதிவு செய்ய முடிவு செய்தேன். இதன் மூலம் எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ ஏதாவது நடந்தால், குறைந்தபட்சம் வீடியோ ஆதாரமாவது இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்