திருவள்ளூர் அருகே உள்ள கோயிலில் விஜயநகர பேரரசு காலத்திலான இரு செப்பேடுகள் கண்டெடுப்பு: தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யவிருப்பதாக தகவல்

3 weeks ago 2

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள பழமையான கோயிலில் விஜயநகர பேரரசு காலத்திலான இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு பகுதியில் 1,057 ஆண்டுகள் பழமையான ஆதித்த கரிகால சோழனால் கட்டப்பட்ட ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்து இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வருகிறது.

இந்நிலையில் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் செயல் அலுவலரும், ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலின் பொறுப்பு செயல் அலுவலருமான பிரகாஷ், சமீபத்தில் கோயில் வளாகத்தில் உள்ள லாக்கர்களில் சோதனை செய்துள்ளார். இச்சோதனையில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் முத்திரையைக் கொண்ட இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த செப்பேடுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் லோகநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

சம்ஸ்கிருத மொழியில், நந்திநாகரி எழுத்து வடிவிலான தகவல்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டிருந்ததால், அதன் புகைப்படங்களை கர்நாடக மாநிலம் – மைசூருவில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவுக்கு மாவட்ட தொல்லியல் அலுவலர்கள் அனுப்பி வைத்தனர். செப்பேடுகளின் புகைப்படங்களை இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப்பிரிவின் இயக்குநர் முனிரத்தினம் அத்தகைய செப்பேடுகளை ஆய்வு செய்துள்ளார்.

அதில் ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பேடுகள், 1,513ம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த கிருஷ்ண தேவராய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. பல பிராமணர்களுக்கு அரசரால் நிலங்கள் தானமாக அளித்துள்ளதை இந்த செப்பேடுகள் குறிப்பிடுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த செப்பேடுகளின் முழு விபரங்களை அறிய டெல்லியில் இருந்து இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவினர், மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலுக்கு நேரில் வருகை தந்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மப்பேடு ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகளை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்த பின்பு கண்டறியப்பட்ட செப்பேடுகளில் கிராமத்தின் வரலாற்றை வருங்கால சந்ததியினருக்கு தெரியும் வகையில் கோயில் உள்ளே வைத்து பாதுகாக்க வேண்டுமென கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவள்ளூர் அருகே உள்ள கோயிலில் விஜயநகர பேரரசு காலத்திலான இரு செப்பேடுகள் கண்டெடுப்பு: தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யவிருப்பதாக தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article