சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம சுவாமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான கருட சேவை 6ம் தேதியும் தேரோட்டம் 10ம் தேதியும் நடக்கிறது. திருவல்லிக்கேணியில் உள்ள பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு யோக நரசிம்மர் யோகாசனத்தில் யோக நிலையில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் தெள்ளிய சிங்கர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சேவை சாதிக்கிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் பார்த்தசாரதிக்கு சித்திரை மாதமும் நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரமோற்சவ விழா நடப்பது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டு நரசிம்ம சுவாமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் விழா நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை 4.45 மணி முதல் 5.45 மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்று விழா விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர். விழாவின் 2ம் நாளான இன்று சேஷ வாகன புறப்பாடும் இரவு 7.45 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடும் நடக்கிறது.
மூன்றாம் நாளான 6ம் தேதி (நாளை) காலை 5.30 மணிக்கு கருட சேவை கோபுரவாசல் தரிசனம் இரவு 7.45 மணிக்கு அம்ஸ வாகன புறப்பாடு நடக்கிறது. 7ம் தேதி சூரிய பிரபை சந்திர பிரபை புறப்பாடு 8ம் தேதி பல்லக்கு நாச்சியார் திருக்கோலமும் மாலையில் யோக நரசிம்மர் திருக்கோலமும் இரவு அனுமந்த வாகன புறப்பாடும் நடக்கிறது.9ம் தேதி சூர்ணாபிஷேகம் நடக்கிறது. அன்றையை தினம் காலை 9.30 மணிக்கு ஏகாந்த சேவையும் இரவு யானை வாகன புறப்பாடும் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 10ம் தேதியும் நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்குமேல் காலை 5.30 மணிக்குள் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். காலை 7 மணிக்கு வடம் பிடித்து தேர் இழுக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு தோட்ட திருமஞ்சனம் நடக்கிறது.
11ம் தேதி நடைபெறும் 8வது நாள் விழாவில் காலை லட்சுமி நரசிம்ம திருக்கோல புறப்பாடும் இரவு குதிரை வாகன புறப்பாடும் 12ம் தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு தீர்த்தவாரி உற்சவமும் அன்று இரவு கொடியிறக்க நிகழ்வும் 13ம் தேதி இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் என்ற சிறிய திருத்தேர் நிகழ்வுடனும் பிரமோற்சவ விழா நிறைவடைகிறது. 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
The post திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம சுவாமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 10ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.