திருவனந்தபுரத்தில் போதைப் பொருளுடன் சினிமா உதவி இயக்குநர் கைது: போலீசார் விரட்டி பிடித்தனர்

1 day ago 3

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் எம்டிஎம்ஏ போதைப் பொருளுடன் ரயிலில் வந்த மலையாள சினிமா உதவி இயக்குநரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர். கேரளாவில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து வருவதை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் தினமும் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பெருமளவு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரும் ரயிலில் ஒருவர் போதைப் பொருள் கடத்துவதாக திருவனந்தபுரம் கரமனை போலீசுக்கும், போதைப் பொருள் தடுப்புத் துறையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ரயில் வந்தவுடன் அதிலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்த முயன்றனர். போலீசாரைப் பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து ஓடினார். உடனடியாக போலீசார் அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவரிடம் பரிசோதனை நடத்தியதில் அந்த நபரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து 2.08 கிராம் எம்டிஎம்ஏ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஜசீம் (35) என்றும், அவர் மலையாள சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திருவனந்தபுரத்தில் போதைப் பொருளுடன் சினிமா உதவி இயக்குநர் கைது: போலீசார் விரட்டி பிடித்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article