திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா 25 லட்சம் பக்தர்கள் விடியவிடிய கிரிவலம்: கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

1 day ago 3

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி விடிய விடிய 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து, அதிகாலை தொடங்கி இரவு 10 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், மாடவீதி வரை தரிசன வரிசை நீண்டது. சுட்டெரித்த கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு குடிநீர், மோர், கடலை மிட்டாய், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டன. தற்காலிக நிழற்பந்தல் வசதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 8.47 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 10.43 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதன்தொடர்ச்சியாக, நேற்று மாலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்காக உயர்ந்தது. இரவு முழுவதும் விடிய விடிய 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காணப்பட்டது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க சன்னதிகள், இடுக்கு பிள்ளையார் கோயில் உள்ளிட்ட சன்னதிகளை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவல பக்தர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து நாளை வரை 4,533 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* மயங்கி விழுந்த பெண் பக்தர்
அண்ணாமலையார் கோயிலில் தரிசன வரிசையில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பல இடங்களில் தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், தரிசன வரிசையில் காத்திருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். பின்னர், மருத்துவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

The post திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா 25 லட்சம் பக்தர்கள் விடியவிடிய கிரிவலம்: கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article