ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று, உலகின் 3ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இத்தாலியின் ரோம் நகரில் இத்தாலி ஒபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று போட்டி ஒன்றில், ஸ்பெயினை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், செர்பிய வீரர் லாஸ்லோ ட்ஜெரி உடன் மோதினார்.
முதல் செட்டை சிரமப்பட்டு கைப்பற்றிய அல்காரஸ், அடுத்த செட்டை எளிதில் வசப்படுத்தினார். அதனால், 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார், பொலிவியாவை சேர்ந்த ஹியுகோ டெலியன் வெலாஸ்கோ உடன் மோதினார். இந்த போட்டியில் அபாரமாக ஆடிய டிமினார், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
டயானா, பேடன் காலிறுதிக்கு தகுதி
இத்தாலி ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவு 4வது சுற்றுப் போட்டியில் நேற்று, ரஷ்ய வீராங்கனை டயானா மேக்சிமோனா ஸ்னெய்டர், பெல்ஜியம் வீராங்கனை எலிஸெ மெர்டென்ஸ் உடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய டயானா, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை பேடன் மெக்கன்ஸி ஸ்டியர்ன்ஸ், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா உடன் மோதினார். முதல் இரு செட்கள் கடும் சவால் மிக்கதாக இருந்ததால், ஆளுக்கு ஒரு செட்டை கைப்பற்றினர். 3வது செட்டில் பேடன் போராடி வென்றார். அதனால், 6-4, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்ற பேடன், காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
போபண்ணா இணை அசத்தல் வெற்றி
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, செக் குடியரசின் ஆடம் பாவ்லாசெக் இணை 4-6, 7-6 (7-5), 10-4 என்ற செட்களில் நிகோலா மெக்டிக் (குரோஷியா), மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) இணையை வீழ்த்தியது. இந்த ஆட்டம் ஒரு மணி 41 நிமிடங்கள் நடந்தது.
The post இத்தாலி ஓபன் டென்னிஸ்: வெற்றி வாகை சூடிய கார்லோஸ் அல்காரஸ் appeared first on Dinakaran.