திருவண்ணாமலை மகா தீபம்: மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் தகவல்

1 month ago 5

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில், திருவண்ணாமலை குறித்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, "இந்த ஆண்டு தீப திருவிழாவில் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை அடிப்படையாக கொண்டு 6 ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.

சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதை அனைவரும் அறிவீர்கள். அதனை போர்க்கால அடிப்படையில் முதல்-அமைச்சர் தீர்த்து வைத்ததை இந்த மன்றம் அறியும். கார்த்திகை தீபத் திருவிழாவில் மலையின் உச்சியில் கொப்பரை தீபம் ஏற்றப்படுவது இன்றியமையாத ஒன்றாகும். ஆன்மிக சான்றோர்கள் காலத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த விழா தடைப்படக்கூடாது என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார். அந்த உத்தரவிற்கேற்ப சரவணன் ராஜா தலைமையில் 8 நபர்களை கொண்ட ஜியாலஜி கமிட்டி அமைக்கப்பட்டு, அக்குழுவினர் கடந்த டிசம்பர் 7,8,9 ஆகிய 3 நாட்கள் களஆய்வு செய்து இருக்கின்றனர்.

அந்த ஆய்வின் அடிப்படையில் 350 கிலோ எடை கொண்ட கொப்பரை மற்றும் திரிகளையும், முதல்நாள் 40 டின்கள் மூலம் 600 கிலோ நெய்யும், பிற நாட்களில் தேவைக்கேற்ப தீபத்திற்கான நெய்யும் மலை உச்சிக்கு எடுத்து செல்லும் வகையில் எவ்வளவு மனித சக்தி அதற்கு பயன்படுத்த வேண்டுமோ அவ்வளவு மனித சக்திகளை பயன்படுத்தி எந்த விதமான சிறு அசம்பாவிதமும் ஏற்படாமல் இந்த தீபத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆகவே சூழ்நிலைக்கு ஏற்றார்போல் தேவையான மனித சக்திகளை பயன்படுத்தப்படும். கார்த்திகை தீபம் இந்த ஆண்டும், மலையின் உச்சியின் மீது தீபம் எரியும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலையில் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பரணி தீபத்துக்கு மட்டும் 300 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகமானோரை மலை மீது ஏற்ற கூடாது என நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,. புவியியல், ஆணையாளர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உரிய அறிவிப்பை வெளியிடுவார். கொப்பரை, நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தேவையான ஆட்கள் மட்டுமே மலைமீது செல்ல அனுமதிக்கப்படுவர்" என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். 

Read Entire Article