
திருப்புவனம்,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த நிக்தா(வயது 41) என்ற பெண்ணும், இவருடைய தாயார் சிவகாமியும் (76) நேற்று சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். காரை நிக்தா ஓட்டினார்.
கோவிலுக்கு சென்றதும் ஒரு இடத்தில் நிக்தா காரை நிறுத்தினார். அப்போது அங்கு காவலாளியாக பணியில் இருந்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமாாிடம் (28), தனது காரை ஓரமாக நிறுத்துமாறு கூறி சாவியை கொடுத்தாராம்.
அவர் தனக்கு கார் ஓட்ட தெரியாது எனக்கூறி காரை வேறொருவரை இயக்க சொல்லி ஓரமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த நிக்தாவிடம், அஜித்குமார் கார் சாவியை கொடுத்துள்ளார்.
அவர் கார் சாவியை வாங்கி திறந்து பார்த்தபோது காரில் வைத்திருந்த 9½ பவுன் நகையை காணவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நிக்தா, காவலாளி அஜித்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என கூறியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நிக்தா போலீசில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அங்கு வந்து காவலாளி அஜித்குமாரை விசாரணைக்காக ஒரு வேனில் அழைத்து சென்றார்கள். இந்தநிலையில் மாலை 6 மணி அளவில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி சிகிச்சைக்காக சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் அஜித்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அறிந்ததும் அஜித்குமாரின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து திருப்புவனம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அஜித்குமார் எங்கே? என கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்ற காவலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் குவிந்தனர். இதனால் இரவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த காவல்நிலையத்தில் பணியாற்றிய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.