
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் வரும் கிரிவலத்தில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு 14 கி.மீ. சுற்றளவுள்ள மலையை சுற்றிவந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்கிறார்கள். அதுவும், ஆண்டுக்கு ஒருமுறை வரும் சித்ரா பவுர்ணமி நாளில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகிறார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று இரவு 8.53 மணிக்கு தொடங்கியது. இன்று இரவு வரை சித்ரா பவுர்ணமி இருப்பதால் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகிறார்கள். திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த பேருந்து நிலையங்கள் எல்லாம் கோவிலில் இருந்து தொலைவிலேயே அமைந்திருந்தன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்களை பேருந்து நிலையத்தில் இருந்து அழைத்து வரவும், திரும்ப கொண்டுவிடவும் ஆட்டோக்கள் பயன்படுத்தப்பட்டன.
பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு முக்கிய சாலைகளில் செல்ல ஆட்டோக்களுக்கு போலீசார் தடை விதித்திருந்ததால், பக்தர்களை டிரைவர்கள் ஆட்டோக்களில் சிறிய தெருக்கள் வழியாக அழைத்து சென்றனர். அதற்கு கட்டணமாக ஒருவருக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை வாங்கிக் கொண்டனர்.
இந்த முறை ஆட்டோக்களுக்கு போட்டியாக மாட்டு வண்டிக்காரர்களும் களத்தில் இறங்கினர். இதனால், போட்டா போட்டி நிலவியது. மாட்டு வண்டி மெதுவாக செல்லும் என்பதால் அதற்கு கட்டணமாக ஒருவருக்கு ரூ.20 வாங்கினர். என்றாலும், மாட்டு வண்டியில் செல்ல பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. பெரும்பாலான மக்கள் ஆட்டோவிலே சென்றனர்.