ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயல், சுதர்சனம் சாலையில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் நேற்று ஒரு வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த தந்தை, மகள் ஆகிய 2 பேரின் சடலங்களை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் அச்சடலங்களை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாக்டர் சாமுவேல் எபினேசர் உள்பட பலரிடம் தீவிர விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், அந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் பெண் சாமியார் அன்னபூரணிக்கு சொந்தமான வீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை கிராமத்தை சேர்ந்த டாக்டர் சாமுவேல் எபினேசர் (34) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாடகைக்கு தங்கியிருந்தார்.
இவருக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆன் சிந்தியா (37) என்ற பெண்ணுடன் சமூகவலைதளம் நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இங்குள்ள தனது வாடகை வீட்டில் ஆன் சிந்தியா மற்றும் அவரது தந்தை சாமுவேல் சங்கர் (78) ஆகிய இருவரையும் டாக்டர் சாமுவேல் எபினேசர் தங்கவைத்து சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும், கடந்த செப்டம்பர் மாதம் சிகிச்சை பலனின்றி சாமுவேல் சங்கர் இறந்துள்ளார். அதே சமயம், ஆன் சிந்தியாவிடம் தான் வெளிநாடு செல்லப் போவதாக சாமுவேல் எபினேசர் கூறியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், டாக்டர் சாமுவேல் எபினேசர் தாக்கி கீழே தள்ளியதில் ஆன் சிந்தியா பரிதாபமாக பலியாகியுள்ளார். பின்னர் இருவரின் சடலங்களையும் படுக்கையறையில் வைத்து, அவர்களின் உடல்கள் அழுகாமல் இருக்க ரசாயனத்தை தடவி, ஏசியை ஆன் செய்துவிட்டு வீட்டை பூட்டிக்கொண்டு டாக்டர் சாமுவேல் எபினேசர் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றதாக போலீசாரின் விசாரணை மற்றும் தடயவியல் சோதனையில் தெரியவந்தது.
மேலும், ஆன் சிந்தியாவின் தந்தை உடல்நலப் பாதிப்பு காரணமாக இயற்கை மரணமடைந்ததாகவும், ஆன் சிந்தியாவை தாக்கி கீழே தள்ளியதில் இறந்ததாகவும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து டாக்டர் சாமுவேல் எபினேசர்மீது கொலை உள்பட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
The post திருமுல்லைவாயலில் தந்தை, மகள் கொடூர கொலை: டாக்டர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.