*விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை
சிவகங்கை : சிவகங்கை அருகே திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் சுற்றுலா மேம்பாட்டு திட்டப்பணிகள் முடிவடையாமலும், முடிவடைந்த பணிகள் பராமரிப்பில்லாமலும் பாதியில் நிற்கின்றன.சிவகங்கை அருகே திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் உள்ளது.
இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடவரை கோயிலாகும். இக்கோவிலில் மலையை குடைந்து ஈஸ்வரர், அம்பாளுக்கு சிலைகள், பிற பரிவார மூர்த்திகளுக்கு சிலை அமைத்துள்ளனர். பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவில் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2011-12ம் ஆண்டில் நிழற்குடை கட்ட ரூ.2.46 லட்சம், கழிவறைகள் கட்ட ரூ.5.85 லட்சம், பல்வகை பயன்பாட்டுக் கூடம் புதுப்பிக்க ரூ.3.58 லட்சம், மலைப்பாதையில் இரும்பு கைப்பிடிகள் அமைக்க ரூ.2.50லட்சம், ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்ய ரூ.2லட்சம் என மொத்தம் ரூ.16.39லட்சம் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் இந்த நிதியில் கட்டப்பட்ட ஆண்,பெண்கள் கழிவறை கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து இதுவரை திறக்கப்படாமல் பூட்டிக்கிடக்கிறது. இதனால் கழிவறை, செப்டிக் டேங்க் அனைத்தும் பராமரிப்பில்லாமல் உள்ளது. பல்வகை கட்டிட மேல்பகுதியில் மழைநீர் கசிகிறது.
மேலும் இந்த கூடத்தில் லைட், பேன் என எந்த வசதியும் இல்லை. குடிநீர் வசதிக்காக போடப்பட்ட ஆழ்குழாய் போர்வெல் பராமரிப்பில்லாததால் குடிநீர் வருவதில்லை. சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்படாமலும், பராமரிப்பில்லாமலும் உள்ளன. தொடர்ந்து இவைகளை பராமரிப்பு செய்யவோ புதிதாக நிதி ஒதுக்கீடு செய்யவோ நடவடிக்கை இல்லாததால் சுற்றுலா மேம்பாட்டு திட்டம் எவ்வித பயனும் இல்லாமல் உள்ளது.
கிரிவல பாதையில் சுமார் ரூ.18 லட்சத்தில் போடப்பட்ட 35 விளக்குகளும் எரியாமல் உள்ளன. சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து அடிப்படை வசதிகளும் செய்ய வேண்டும் என பக்தர்கள், கிராமத்தினர் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:பல்வகை கட்டிடம் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு குறைந்த வாடகைக்கு விடப்பட்டு அந்த வாடகை பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது இக்கட்டிடத்தில் லைட், பேன் உள்ளிட்டவை இல்லை. இதனால் கட்டிடம் பராமரிப்பில்லாமல் மூடிக்கிடக்கிறது. குடிநீருக்காக அமைக்கப்பட்ட மோட்டார் மற்றும் மின்சாதன பொருட்கள் தண்ணீர் தொட்டி உள்ளிட்டவைகளை காணவில்லை.
கழிவறை கட்டியும் திறக்கப்படாமல் பயனில்லாமல் உள்ளது. கிரிவல பாதையில் உள்ள விளக்குகள் எரிவதில்லை. கூடுதல் செலவு செய்தும் அவற்றை பராமரிக்காமல் விட்டுள்ளதால் அந்த நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவில் முன்பு உள்ள குளம் பராமரிப்பில்லாமல் உள்ளது.
சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் சரிவர நடந்துள்ளதா, பணிகள் முடிக்கப்படாததற்கு கூடுதல் நிதி தேவையா என்பது குறித்து ஆய்வு செய்து பணிகளை முடிக்கவும், பராமரிப்பு செய்யவும் போதிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றனர்.
The post திருமலையில் பாதியில் நிற்கும் சுற்றுலா மேம்பாட்டு திட்டம் appeared first on Dinakaran.