திருமயம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

1 day ago 2

திருமயம், ஜன.30: திருமயம் அருகே பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள லெனா விலக்கிலிருந்து செங்கீரை செல்லும் பிரதான சாலையில் இருந்து பிரிந்து திருவானைக்காவான்பட்டி கிராமத்திற்கு கிராம சாலை செல்கிறது. இந்நிலையில் இந்த சாலையை திருவானைக்காவான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை புனரமைப்பு செய்து பல ஆண்டுகளைக் கடந்த நிலையில் தொடர் பராமரிப்பு இல்லாததால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் பரவி காணப்படுவதோடு சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட பகுதி கிராம மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும் சாலையில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியோர்கள், வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களால் வாகனத்தை இயக்குவதில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் பலன் அளிக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த பழுதடைந்த சாலை சம்பந்தமாக கடந்த மாதம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவானைக்காவான்பட்டி கிராம மக்களின் நலன் கருதி பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் கிராம சாலையை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருமயம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article