திருமயம், அரிமளம் பகுதி வாரசந்தைகளில் தக்காளி விலை குறைந்தது வெங்காயம் விலை உயர்ந்தது

2 months ago 8

திருமயம், நவ.12: திருமயம், அரிமளம் பகுதி வாரசந்தைகளில் தக்காளி விலை சற்று குறைந்த நிலையில் வெங்காயம் விலை அதிகரித்து காணப்பட்டது. தமிழகத்தில் காய்கறி விலை நிலவரத்தை மக்களின் பயன்பாடு காலநிலை உள்ளிட்டவைகள் நிர்ணயிக்கின்றன. அதன்படி முகூர்த்த காலங்கள், கோயிலுக்கு விரதம் இருக்கும் மாதங்கள், மழை, வெயில் உள்ளிட்ட இயற்கை சூழ்நிலைகள் காய்கறிகளின் விலையை ஏற்றம் செய்யவோ குறையவோ செய்கிறது. இல்லத்தில் சமையல் காய்கறிகளில் மிகவும் முக்கியமானதாக வெங்காயம், தக்காளி ஆகியவை உள்ளது.

இந்த இரு காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும் போது அது கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிக்கிறது. அதேசமயம் மற்ற காய்கறிகள் விலை அதிகமாக குறைவாக இருந்தாலும் தக்காளி, வெங்காயம் விலை கட்டுக்குள் இருக்கும் போது கிராம மக்கள் சற்று நிம்மதி அடைகின்றனர். இதன் அடிப்படையில் அரிமளம், திருமயம் பகுதியில் நேற்று நடைபெற்ற வார சந்தைகளில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்கப்பட்ட நிலையில் நேற்று தக்காளி விலை கடந்த வாரத்தை விட சற்று குறைந்து கிலோ ரூ. 35 முதல் 40 க்கு விற்கப்பட்டது.

அதே சமயம் சின்ன வெங்காயம் கிலோ கடந்த சில வாரமாக ரூ. 50 முதல் 60க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ரூ.70 முதல் 80க்கும், பெரிய வெங்காயம் ரகம் குறைந்து சிறிய அளவிலானது கிலோ ரூ. 50 முதல் 60ரூபாய்க்கும் விற்கப்பட்டது. முதல் ரக பெரிய அளவிலான பெரிய வெங்காயம் திருவேயம் பகுதி வார சந்தைகளில் எங்கும் விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஒரே நிலையில் இருந்த நிலையில் தற்போது ரூ.20க்கு மேல் அதிகரித்துள்ளது. இதேபோல் உருளைக்கிழங்கு கிலோ ரூ.50 முதல் 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் அரை கிலோ ரூ.40 முதல் 50 மற்ற காய்கறிகளும் வழக்கமான விலையில் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அடுத்தடுத்த நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை மேலும் அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post திருமயம், அரிமளம் பகுதி வாரசந்தைகளில் தக்காளி விலை குறைந்தது வெங்காயம் விலை உயர்ந்தது appeared first on Dinakaran.

Read Entire Article