திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை - வாலிபர் கைது

2 hours ago 2

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகள் புவனேஸ்வரி (19 வயது). மயிலாடுதுறையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய பெற்றோர் விவசாயம் மற்றும் மாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக புவனேஸ்வரி அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (30 வயது) என்பவரது வீட்டில் பால் ஊற்றி வந்துள்ளார். அப்போது புவனேஸ்வரியிடம், குணசேகரன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விடாமல் வற்புறுத்தி வந்துள்ளார். குணசேகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ள நிலையில் நாளுக்கு நாள் அவருடைய தொந்தரவு அதிகரிக்கவே மன உளைச்சலுக்கு ஆளான புவனேஸ்வரி கடந்த 2-ந் தேதி இரவு தனது வீட்டில் பூச்சி மருந்து (விஷம்) குடித்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் உடனடியாக புவனேஸ்வரியை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புவனேஸ்வரி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இரவு அவருடைய உடல்நிலை கவலைக்கிடமானது. அப்போது திருநீலக்குடி போலீசார் புவனேஸ்வரியிடம், மரண வாக்கு மூலம் பெற்றனர். இதையடுத்து குணசேகரன் கைது செய்யப்பட்டார். இதனிடையே இரவு புவனேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட குணசேகரன் திருவிடைமருதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். புவனேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article