
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையின் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் நேஹா மிஸ்ரா (வயது 29). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்குமுன் மும்பையின் கிழக்கு சாண்டாகுரூஸ் பகுதியை சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், புதுப்பெண் நேஹா மிஸ்ரா சாஸ்திரி நகரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நேஹா மிஸ்ராவின் தாயார் அருகே உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.
பின்னர், வீடு திரும்பியபோது வீட்டின் அறையில் பேனில் புதுப்பெண் நேஹா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நேஹாவின் தாயார் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், தற்கொலை செய்துகொண்ட புதுப்பெண் நேஹாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நேஹா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தின் புதுப்பெண் தாயார் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.