கொங்கு நாட்டின் மிக அழகிய கிராமங்களில் ஒன்று கொழுமம். இன்றைய திருப்பூர்; மாவட்டத்தில் மடத்துக்குளம் வட்டத்தில் ஆன் பொருநை எனும் அமராவதி ஆற்றின் கரையில் அழகிய சூழலில் அமைந்துள்ளது. அமராவதி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது கொழுமம். இதன் வடகரையில் அமைந்துள்ளது குமரலிங்கம் எனும் வரலாற்றுப்புகழ் கொண்ட சிற்றூர். கொழுமத்தின் கீழ்பால் குதிரையாறு எனும் அசுவநதி பாய்கிறது. இந்த ஆறு கொழுத்திற்கு அருகில் ஆன்பொருநையான அமராவதியில் ஒன்று சேர்கிறது. கொழுமத்தை ஒட்டியுள்ள சங்கிராம நல்லூர் சங்கிராம நல்லூரும் கொழுமமும் ஒன்றே, குழுமூர் என்பதன் வடமொழிப் பெயரே சங்கிராம நல்லூர். கொழுமத்தின் பழம்பெயர் குழுமூர் ஆகும்.
சங்க இலக்கியத்தில் இவ்வூரைப்பற்றிக்குறிப்பு உள்ளது. பல்லான் குன்றிற் படு நிழல் சேர்ந்த நல்லான் பரப்பிற் குழுமூர் ஆங்கண் கொடைக்கடன் என்ற கோடா நெஞ்சின்- உதியன் என்று அகநானூற்றில் (பாடல்168) பேசப்படுகிறது. இந்தி உதியன் பாரதப்போரில் பாண்டவர் ஐவருக்கும் அவர் சேனைக்கும் அதுவே கௌரவர் நூற்றுவருக்கும் அவர் சேனைக்கும் உணவு வழங்கியவன். இதை முரஞ்யூர் முடி நாகராயர் எனும் புலவர் ஈரைப் பதின்மரும் பொருது களத் தொழியப் பெருஞ்சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் என்று பாராட்டுகிறார்.
அவர் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்று அழைக்கப்படுகிறான். அவன் வாழ்ந்த பகுதி இதுவேயாம். இந்தக் குழுமூர் மிகச் சிறந்த வாணிகத் தலமாக விளங்கியுள்ளது. இவ்வூரில் மேல்நாட்டு வாணிகர்களும், கீழ்நாட்டு வாணிகர்களும் குழுமி வாணிகம் செய்தனர். அதனால் இவ்வூர் குழுமூர் ஆயிற்று. வடமொழியில் இதையே சங்கிராம நல்லூர் என்றனர். சங்கிராமம் என்றால் ஒன்றுசேர்வது என்று பொருள். வருவாய்த்துறைக் கணக்கில் கொழுமம் தனியூராகவும் சங்கிராமநல்லூர் தனியூராகவும் உள்ளது. சங்க இலக்கியத்தில் கூறப்படும் முதிரமலைத் தலைவனான வள்ளல் குமணன் வாழ்ந்த பகுதியும் இதுவே என்பதை அறிய முடிகிறது.
தன்னுடைய தலையையும் தமிழுக்காக தந்தவன் குமணன் என்ற பெருவள்ளல். இவனது பெருமையைப் புறநானூற்றில் காணலாம். இதுவே இவன் வாழ்ந்த நகரம். இவனது மலை குதிரை மலை என்று அழைக்கப்படுகிறது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது முதுகிற் சேணமிட்டுச் சவாரிக்கு ஆயத்தமாய் இருக்கும் குதிரை போலத் தோற்றமளிக்கிறது. இக்குதிரை மலை இயற்கை அழகும் இன்பக் காட்சியும் உடையதாய் விளங்குகிறது. இம்மலையில் சிறு தெய்வங்களுக்கான ஆலயங்கள் நன்னீர் ஊற்றுகள், பூம்புதர்கள், மூலிகைகள் முதலிய உள்ளன. மலைவாழ் மக்களும் வாழ்கின்றனர். இக்குதிரையாறு கொழுமத்தில் ஆன்பொருநை ஆறான அமராவதியில் ஒன்று சேர்கிறது. அந்த வகையில் இவ்விடமும் ஒரு கூடுதுறையாகும்.
இந்த ஆற்றின் கரையில் உள்ள ஊர்கள் அனைத்தும் வரலாற்றுப் பெருமையும், பழமையுடையவை. இந்த ஊர்களில் உள்ள ஆலயங்கள் அனைத்தையும் கட்டியவர்கள் கொங்குச் சோழர்கள். கொழுமம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகியவை ஆங்கில எழுத்தான முல் தொடங்குவதால் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இவற்றை K.Villages என்று அழைத்தார்கள். கல்வெட்டுக்கள் இவ்வூரைக் கரை வழி நாட்டுக்குழுமம், சோழன் பெருவழி சங்கிராம நல்லூர், விக்ரம சோழ நல்லூர், வீர நாராயண நல்லூர், கேரள கேசரி நல்லூர், உமா பரமேஸ்வரி நல்லூர், கீழ்க்கல்லாபுரம், திருவளந்துறை தென்னூர் சதுர்வேதி மங்கலம், மாதவச் சதுர்வேதி மங்கலம், விக்கிரம சதுர்வேதி மங்கலம், உலகுடைய பிராட்டியார் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கின்றனர்.
சங்கிராம நல்லூர் என்ற கிராமம் முழுவதும் தாண்டேசுவர் கோயிலுக்குச் சொந்தமான இனாம் கிராமமாக இருந்ததால் இவ்வூர் இனாம் சங்கிராம நல்லூர் என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோயிலைச் சார்ந்து குடிகளும், குடிகளைத் தாங்கிக் கோயில்களும் இயங்கின. ஆகவே கோயில்கள் கட்டுவதால் சமுதாயம் பலனடைந்து கோயில் திருப்பணி சமுதாய திருப்பணியாக என்பதை உணர்ந்து கொழுமத்தில் அமைந்துள்ள நித்தம் நின்றாடுவார் கோயிலை வீரசோழன் எனும் கொங்குச் சோழமன்னன் தனது ஜன்ம நட்சத்திரத்தன்று சூரிய கிரகணம் வந்ததால் தன் நலத்துக்காகவும், உலக நலத்துக்காகவும் இந்தக் கோயிலைக் கட்டினான் என்று கல்வெட்டுகள் சொல்லுகின்றன.
தாண்டவேசுவர் திருக்கோயில் கிழக்குப் பார்த்த திருக்கோயில். கோயிலின் முன்புறம் கல்காரத் திருப்பணியோடு கூடிய மண்டபமும், அதன் மேல் சால விமானம் அமைந்துள்ளது. உள்ளே பலிபீடம், கொடிக்கம்பம், அதைத் தாண்டியதும் முப்பத்தி இரண்டு கற்றூண்கள் கொண்ட மண்டபம். வலதுபுறம் ஆடவல்லானின் திருவுருவம் பொன்னம்பலத்தில் ஆடுகின்ற எம்பெருமான் என்பது வியக்க வைக்கும் இச்சிலை. நடராஜப் பெருமானின் திருவுருவம்.
அந்த குனித்தபுருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குறுஞ் சிரிப்பும் கொண்டு எங்கு வந்தனை நான் இருக்கிறேன் என்று கூறுவது போல இருக்கும். இந்த ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற எம்பெருமான் தாண்டவேஸ்வர் எனும் அழகிய திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் உள்ள அழகிய நடராசத் திருமேனிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறைவனின் நடராஜர் திருவுருவம் தமிழ் கண்ட அற்புதப் படைப்பு களில் ஒன்று. ஆடத்தெரியாத கடவுளை நான் நம்பத் தயாராக இல்லை என்று சொன்னார் ஒரு பிரஞ்சு அறிஞர். உயிர்கள் யாவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நுண்ணிய அணுகூட அசைவின்றி இருப்பதில்லை. இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு அறிவியல் கூறுகிறது.
இதைத்தான் இயங்கிக்கொண்டு இருக்கும் ஆடவல்லான் திருவுருவம் சுட்டிக்காட்டுகிறது. பற்று, பாசம், அகந்தை, அறிவியல் ஆகியவற்றை அறிந்தால் உள்ளொளி உண்டாகும் என்பதையும் ஆடவல்லானின் வடிவம் குறிக்கின்றது. இறைவனின் ஐம்பெரும் தொழிகளையும் ஆடவல்லான் திருவுருவம் சுட்டிக்காட்டுவதால் இதைசமயப் பற்று உடையோர் இவ்வாறு கூறுகின்றனர். தோற்றத் துடியதனில் தோயும் திதி அமைப்பில் சாற்றிடும் அங்கியிலே சங்காரம் – ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோ தம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு என்பது உண்மை விளக்கம். ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்மே தேன்மொழிப்பாகன் திருநடனம் ஆடுமே என்பார் திருமூலர். நடராஜத் திருவுருவம் மிகப்பெரிய திருமேனி, பிரபையும் அடிப்பீடமும் நடராஜத் திருமூர்த்தமும் ஒன்றாக ஒரே சார்பில் வடிக்கப்பட்டுள்ளது.
அருகமைந்து நிற்கும் சிவகாமித் தாயார் திருவுருவம் சற்றுப் பிற்காலத்தைச் சேர்ந்தது எனலாம். கொங்கு சோழ மன்னர்களின் அற்புதப் படைப்புகளில் ஒன்று திருமேனி என்பதில் ஐயமில்லை. இந்த அழகிய உருவத்தை உருவாக்கிய சிற்பிக்கு மானியம் வழங்கியதாகவும் கல்வெட்டுகள் பேசுகின்றன. நித்தம் நின்று ஆடுவார் என்கிற அழகிய தொடரால் கல்வெட்டுகள் கூறுகின்றன. கல்வெட்டுகள் சோழீச்சுரம் என்று அழைத்தாலும் இங்கு எழுந்தருளி உள்ள ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற இந்த தாண்டவேசுவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
தாண்டவேசுவர் என்பது தாண்டவ ஈஸ்வர் எனும் வடசொல்லின் திரிபு. மூலவர் நேராகச் சிறிய அழகிய லிங்கத்திருமேனியாக சோழீச்சுவர் காட்சி தருகிறார். அம்பாள் பெரிய நாயகி பிரகன்நாயகி என்று அழைக்கப்படுகிறார். காத்தற் கடவுளாகிய திருமாலுக்கும் இதனருகிலேயே வடபுறத்தில் ஒரு கோயில் உள்ளது. இவருக்கு கல்யாண வரதராஜப் பெருமாள் என்பது திருப்பெயர்.
உள்ளே கிழக்கு மேற்காக பதினெட்டு அடியும் தெற்கு வடக்காக முப்பத்தி நான்கு அடியும் கொண்ட மண்டபம் உள்ளது. இதற்கு அப்பால் அர்த்த மண்டபம் உள்ளது. இம்மண்டபத்திற்கு உட்புறம் ஆண்டாள் மற்றும் ஆழ்வார்கள் திருவுருவங்கள் உள்ளன. கருவறையில் கல்யாண வரதராஜப் பெருமாள் தமது உபய தேவியருடன் நின்ற கோலத்தில் சேவை சாதித்து அருள்கின்றார். திருக்கோயில் வளாகத்திற்குள் ஸ்ரீதேவி நாச்சியாருக்கும் தனியாக கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்கழித் திங்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்பு பெற்றது. அதுபோல வைகுண்ட ஏகாதசி திருவிழாவும் மிகவும் சிறப்புடையது.
வழித்தடம்: பழனி, உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து கொழுமத்திற்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. நிறுத்தத்தில் இறங்கியவுடன் நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
புதுகை.பொ.ஜெயச்சந்திரன்
The post திருமண வரமருளும் கல்யாண வரதராஜப் பெருமாள் appeared first on Dinakaran.