ரோமில் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்தும் ஒப்பந்தம் உடன்படாவிடில் ஈரான் மீது குண்டு வீசுவோம்

9 hours ago 3

* அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல், திடீரென என்ட்ரி ஆன ரஷ்யா, சீனாவால் பரபரப்பு

தெஹ்ரான்: ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்தும் வகையிலான ஒப்பந்தம் மேற்கொள்வது பற்றி ரோமில் ஈரான் – அமெரிக்கா 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. இதன் முடிவில் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால் குண்டு வீசுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இநத விவகாரத்தில் ஈரானின் நட்பு நாடுகளான ரஷ்யா, சீனா என்ட்ரி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல், அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு வலுத்து வருகிறது.

இதனால் ஈரான், தனது பாதுகாப்புக்காக அணுஆயுதம் தயாரிக்கும் பணியை தீவிரமாக்கியுள்ளது. இதை அமெரிக்கா விரும்பவில்லை. இந்நிலையில், ‘ஈரான் அணுஆயுதம் தயாரிக்க கூடாது, அணுசக்தி திட்டம் என்ற பெயரில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்’ என்று ஈரானுக்கு டிரம்ப் கடிதம் எழுதினார். இதைதொடர்ந்து முதற்கட்டமாக கடந்த 12ம் தேதி ஈரான்-அமெரிக்கா பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இது சுமூகமாக முடிவடைந்தாலும் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.

இதையடுத்து 2ம் கட்டமாக இன்று இத்தாலி தலைநகர் ரோமில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதன் முடிவில், ‘ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்த தயங்க மாட்டேன்’ என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில்தான் அமெரிக்கா-ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் புதிதாக 2 நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. அதாவது ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளன. இப்படியான சூழலில்தான் இன்று நடக்கும் பேச்சுவார்த்தை தொடர்பாக இருநாடுகளும் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளனர்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லியு ஜியான் கூறுகையில், ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு சீனா ஆதரவு வழங்குகிறது. ஏற்கனவே அமெரிக்கா- ஈரான் அணுசக்தி திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானதை ரத்து செய்துவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்துள்ளது. இதனால் அமெரிக்கா தனது நேர்மையை காட்ட வேண்டும். பரஸ்பர மரியாதையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். படைபலம் உள்பட பிற வழிகளில் ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதை அமெரிக்கா கைவிட வேண்டும். பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாகதான் தீர்க்க வேண்டும்’ என்றார்.

ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், இருநாடுகள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதை வரவேற்கிறோம். இப்படியான பேச்சுவாரத்தை ஈரானின் பதற்றங்களை தணிக்க வழிவகுக்கும்’ என்றார். அமெரிக்காவுடனான 2ம் கட்ட பேச்சுவார்த் தைக்கு முன்னதாக ஈரான் வெளியறவு துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான பிரதிநிதிகள் ரஷ்யா சென்றனர். ரஷ்யாவும், ஈரானும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன.

இதனால் அமெரிக்காவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட விஷயம், 2ம் கட்ட பேச்சுவார்த்தையை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி இருதரப்பும் விவாதித்தனர். அதுமட்டுமின்றி ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி கொடுத்து அனுப்பிய ரகசிய கடிதம் ரஷ்ய அதிபர் புதினிடம் வழங்கப்பட்டது. அதில் உள்ள விஷயம் என்ன? என்பது ரகசியமாகவே உள்ளது. இதற்கிடையேதான் அமெரிக்கா ஈரானுடனான அணுசக்தி திட்டம் தொடர்பான விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஈரானை காக்க ரஷ்யா உதவிக்கு செல்லுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ரஷ்யா-ஈரான் இடையே ராணுவ படைபலத்தை ஒருங்கிணைத்து செயல்படுவது, கூட்டு பயிற்சி சார்ந்த ஒப்பந்தங்கள் உள்ளன. இதனால் அமெரிக்கா – ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது, அணுசக்தி திட்டம் என்ற பெயரில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

The post ரோமில் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்தும் ஒப்பந்தம் உடன்படாவிடில் ஈரான் மீது குண்டு வீசுவோம் appeared first on Dinakaran.

Read Entire Article