திருமங்கலம், ஜன. 26: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும், மீண்டும் மஞ்சப்பையை அதிகளவில் பயன்படுத்துவதை வலியுறுத்தியும் திருமங்கலம் நகராட்சியில் பிளாஸ்டிக் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபட்டு வருகிறது. இதனால் அவற்றின் உபயோகத்தை தடுப்பதுடன், மீண்டும் மஞ்சப்பைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், திருமங்கலத்தினை பிளாஸ்டிக் இல்லாத நகராக மாற்றவும் நேற்று நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் அசோக்குமார். சுகாதாரத்துறை அலுவலர் சண்முகவேல், ஆய்வாளர்கள் சிக்கந்தர், வனஜா, துப்பரவு மேற்பார்வையாளர்கள் சதிஷ், கேவசன், யமுனா, தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள் துர்கா, அனிதா, பாக்யா, சுமதி, பாண்டீஸ்வரி, முத்துகுமரேசன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் திருமங்கலம் மறவன்குளம் கண்மாயிலிருந்து விருதுநகர் ரோடு ஆறுகண்பாலம் வரையிலான பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் பொருள்களை அவர்கள் சேகரித்து அப்புறப்படுத்தினர்.
The post திருமங்கலத்தில் பிளாஸ்டிக் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு appeared first on Dinakaran.