திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இருக்கைகள் சேதம்: பயணிகள் தவிப்பு

3 hours ago 2

திருப்போரூர்: திருப்போரூர் பேருந்து நிலையத்தில் சேதமடைந்த நாற்காலிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலையில் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, மாமல்லபுரம், கல்பாக்கம், தாம்பரம், கோயம்பேடு, உயர் நீதிமன்றம், தி.நகர், அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகளும், நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதன் காரணமாக திருப்போரூர், ஆலத்தூர், தண்டலம், செம்பாக்கம், மடையத்தூர், சிறுதாவூர், ஆமூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இவர்களுக்காக பேருந்து நிலையத்தில் காத்திருப்பு கூடமும் நாற்காலிகளும் உள்ளன. இவை அமைக்கப்பட்டு நீண்ட நாட்களாகி விட்டதால் இந்த நாற்காலிகள் கைப்பிடிகள், உட்காரும் இருக்கை போன்றவை உடைந்து விட்டன.

சிலவற்றில் நாற்காலிகளே இல்லாமல் வெறும் இரும்பு குழாய்கள் மட்டுமே உள்ளன. இதன் காரணமாக திருப்போரூர் பேருந்து நிலையத்திற்கு குழந்தைகள் மற்றும் பைகளுடன் வரும் பொதுமக்கள் உட்கார முடியாமல் நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், இந்த காத்திருப்பு கூடத்தில் சமூக விரோதிகள் சிலர் அமர்ந்துக் கொண்டு மது அருந்து கின்றனர்.

இதனால் பெண்கள் அந்த காத்திருப்பு கூடத்திற்கு செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. ஆகவே, பேருந்து நிலையத்தை பராமரித்து வரும் திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் காத்திருப்பு கூடத்தில் உடைந்து சேதமடைந்து காணப்படும் நாற்காலிகளை சீரமைத்து புதியவற்றை அமைக்க வேண்டும் என்றும், பேருந்து நிலைய வளாகத்தில் மது அருந்தும் சமூக விரோதிகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து பாதுகாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இருக்கைகள் சேதம்: பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article