டிராக்டர் திருடிய வாலிபர் கைது

4 hours ago 2

புதுச்சேரி, ஜன. 21: புதுவை நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜ் (43). டிராக்டர் மூலம் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 18ம் தேதி புதுச்சேரி- கடலூர் சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் அருகே சாலையோரம் டிராக்டரை நிறுத்தியுள்ளார். பின்னர் மறுநாள் தியாகராஜ் அங்கு சென்று பார்த்தபோது டிராக்டர் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இச்சம்பவம் குறித்து தியாகராஜ் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர். இந்நிலையில் வில்லியனூர் ஆரியப்பாளையம் பகுதியில் சந்தேகப்படும்படியாக டிராக்டரை ஓட்டி வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் சீர்காழியை சேர்ந்த வரதராஜன் (எ) சுந்தரராஜன் (29) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை விசாரித்தபோது, சுந்தரராஜன் சென்னைக்கு வேலை தேடி செல்லும்போது, புதுச்சேரியில் இறங்கி மது அருந்தியுள்ளார். பின்னர் போதையில் படுத்திருந்தபோது, அவருடைய செல்போன், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் ஊருக்கு எப்படி செல்வது என யோசித்தபோது, அவரது கண்ணில் டிராக்டர் தெரிந்தது. உடனே சுந்தரராஜன் டிராக்டரை திருடி சென்றதாக கூறினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

The post டிராக்டர் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article